3வது குழந்தை பிறந்ததை மறைத்த.. பெண் மேயர் டிஸ்மிஸ்!

Su.tha Arivalagan
Jul 29, 2023,02:31 PM IST
பாட்னா: பீகார் மாநிலத்தில் 3வது குழந்தை பிறந்ததை தெரிவிக்காமல் மறைத்ததற்காக பெண் மேயர் ஒருவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பீகாரில் ஒரு சட்டம் அமலில் உள்ளது. அதன்படி 2008ம் ஆண்டுக்குப் பிறகு ஒருவருக்கு 2க்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால் அவர்கள் நகராட்சித் தேர்தலில் போட்டியிட முடியாது. இந்த சட்டத்தின்படி தற்போது தனது 3வது குழந்தையை மறைத்ததற்காக சாப்ரா மாநகராட்சி மேயர் ராக்கி குப்தாவை மாநில தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்துள்ளது. 



மாடல் அழகியாக இருந்து பின்னர் தேர்தலில் போட்டியிட்டு மேயர் பதவிக்கு உயர்ந்தவர் ராக்கி குப்தா. இவருக்கு 3 குழந்தைகள் உள்ளன. ஆனால் அதை மறைத்து தனக்கு 2 குழந்தைகள் மட்டுமே உள்ளதாக தேர்தலின்போது சமர்ப்பித்த ஆவணங்களில் கூறியிருந்தார். ஆனால் அவருக்கு 3வது குழந்தை இருப்பதை கண்டுபிடித்த மாநில தேர்தல் ஆணையம் தற்போது அதை மறைத்த குற்றத்திற்காக ராக்கி குப்தாவை தகுதி நீக்கம் செய்துள்ளது.

ராக்கி குப்தா தனது 3வது குழந்தை குறித்த தகவலை மறைத்து விட்டதாக கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்திருந்தார் முன்னாள் மேயரான சுனிதா தேவி. அந்தப் புகாரை விசாரித்த தேர்தல் ஆணையம் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது. முன்னதாக இதுதொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் தேர்தல் ஆணையத்தில் கொடுத்த விசாரணை அறிக்கையில், ராக்கி குப்தா - வருண் பிரகாஷ் தம்பதிக்கு 3வது குழந்தை இருப்பதை உறுதி செய்திருந்தார். ஆதார் கார்டு அடிப்படையில் இது உறுதி செய்யப்பட்டது.



இதுகுறித்து ராக்கி குப்தா கூறுகையில், 6 வயதாகும் ஸ்ரீபிரகாஷை எனது உறவினருக்குத் தத்து கொடுத்து விட்டோம். சட்டப்படி தத்து கொடுக்கப்பட்டு விட்டதால் அதை எனது குழந்தை என்று சொல்ல முடியாது. எனவே சட்டப்படி எனக்கு 2 குழந்தைகள்தான் என்றார்.

ஆனால் மாநகராட்சி சட்டப்படி 3வது குழந்தை பிறந்து சட்டப்படி அதை தத்து கொடுத்து விட்டாலும் கூட அவர்களால் தேர்தலில் போட்டியிட முடியாது என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மாடல் அழகி டூ மேயர்

ஆரம்பத்தில் பேஷன் துறையில் ஜொலித்தவர்தான் ராக்கி குப்தா. இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு கிட்டத்தட்ட 70,000க்கும் மேற்பட்ட பாலோயர்கள் உள்ளனர். பேஷன் உலகில் பிரபலமானவராக வலம் வந்தவர் ராக்கி குப்தா.



2021ம் ஆண்டு நடந்த ஐ கிளாம் மிஸஸ் பிகார் மாடல் போட்டியில் 2வது இடத்தைப் பிடித்தவர். எம்பிஏ படித்துள்ள ராக்கி குப்தா அரசியலில் குதித்து சாப்ரா மாநகராட்சி மேயர் தேர்தலில் போட்டியிட்டு அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தற்போது தனது பதவியை இழந்துள்ளார்.

ஆனால் இது எனது தோல்வி அல்ல, என்னைத் தேர்ந்தெடுத்த மக்களின் தோல்விதான் என்று அவர் கூறியுள்ளார்.