இடுக்கமான வாசல் வழியாக உட்பிரவேசியுங்கள்

Su.tha Arivalagan
Jan 08, 2023,10:43 AM IST
- கோல்டுவின் ஆசிர்

ஒரு புகழ்பெற்ற மனிதர் தெருவோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பன்றிகள் கூட்டமாக ஒரு மனிதன் பின்னே போய்க் கொண்டிருப்பதை பார்த்தார். அவர் அந்த காட்சியை பார்த்துக் கொண்டே அந்த மனிதனை பின் தொடர்ந்தார். அவர் அவனைப் பார்த்து ஆச்சரியமாக எப்படி இந்த பன்றிகள் கூட்டமாக உன்னைப் பின் தொடர்ந்து வருகின்றன. அப்படி எங்கே போகிறாய் என்று கேட்டார். 

அதற்கு அவன் இந்த பன்றிகளை கொல்வதற்காக ஓட்டிச் செல்கிறேன் என்றான். அதற்கு அவர் எப்படி பன்றிகளை கொல்லும் இடம் வரை கொண்டு வந்தாய் என்று கேட்டார். அப்போது அவன் கைகளில் இருந்த அவரை கொட்டைகளை காட்டி அவ்வப்போது கொஞ்சம் கொட்டைகளை கீழே போடுவேன் அதை சாப்பிட தொடர்ந்து பன்றிகள் என் பின்னால் வந்தது என்றான். 




"அன்பானவர்களே, பிசாசனவனும் தான் கையில் வைத்திருக்கும் சிற்றின்பங்களை அவ்வப்போது கிழே போடுகிறான். அதற்கு ஆசைப்பட்டு அவன் பின்னால் பாவத்திற்கு மக்கள் அடிமையாகி நரகத்திற்கு போய்க் கொண்டிருக்கிறார்கள். எவ்வளவு பரிதாபம். 

சிற்றின்பத்திற்கு அடிமையாகி பாவத்தில் தவிக்கும் மனிதர்கள் பாவம் என்று தெரிந்தாலும் அதிலிருந்து வெளிவர முடியாமல் அந்த பாவம் அவர்களை இழுத்துக் கொள்கிறது. நரகத்திற்கு போகும் வாசல் என்று போடப்பட்டிருந்தால் யாரும் அந்த வாசலுக்கு போகமாட்டார்கள் , ஆனால் சத்துருவானவன் சிற்றின்பத்தை காட்டி நரக வாசலுக்கு இழுத்து செல்கிறான். தாங்கள் கொல்லப்பட போகிறோம் என்று அறியாமல் அந்த மனிதனை பின் தொடர்ந்த பன்றிக்கூட்டம் போல தாங்களும் நரக வாசலுக்கு போகிறார்கள்.

இதை வெளிப்படுத்த இயேசு கிறிஸ்து இரண்டு வாசல்களை குறித்து சொல்கிறார். ஒன்று கேட்டுக்கு போகும் வாசல், மற்றொன்று பரலோகத்திற்கு போகும் வாசல்.  கேட்டிற்கு போகும் வாசல் விரிவும் வழி விசாலமுமாய் இருக்கும். அதன் வழியாக போகிறவர்கள் அனேக மக்கள்‌. இன்றைய நாட்களிலும் நிறைய பேர் அதிலும் வாலிபர்கள் கர்த்தரின் சித்தப்படி நடக்க மனதில்லாமல் தங்கள் இருதயம் விரும்புகிறதை செய்கிறார்கள். ஆனால் அதின் முடிவோ பயங்கரமாய் இருக்கும். 

பரலோக பிதாவின் சித்தப்படி செய்கிறவனே பரலோகத்தில் பிரவேசிப்பான். எனவே தேவ சித்தம் செய்து இடுக்கமான வாசல் என்றாலும் அதன் முடிவாகிய நித்திய ஜீவனை பெற்றுக் கொள்வோம்.