3 முறை செத்துப் பிழைச்சுட்டேன், நலமாக இருக்கிறேன்.. பாட்டுக்குப் பாட்டு புகழ் அப்துல் ஹமீது விளக்கம்

Manjula Devi
Jun 25, 2024,02:16 PM IST

கொழும்பு: பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சியின் புகழ் பேச்சாளர் அப்துல் ஹமீது உயிரிழந்ததாக நேற்று வதந்திகள் பரவிய நிலையில், நான் மூன்று முறை செத்து உயிர்ப்பிழைத்து விட்டேன் என மனம் கலங்கி அழுதுகொண்டே பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட அப்துல் ஹமீது தனது கம்பீரமான, வசீகரிக்கும் குரலால், தெளிவான தமிழ் உச்சரிப்பில் இன்று  பல தரப்பு மக்களை கவர்ந்தவர். இவர் முதல் முதலாக கொழும்பில் வானொலி நிலையத்தின்  ஒலிபரப்பு அறிவிப்பாளராக பணியாற்றியவர். இவரின் தெளிவான தமிழ் உச்சரிப்பின் மூலம் சன் டிவியில் லலிதாவின் பாட்டுக்கு பாட்டு என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர். இதனைத் தொடர்ந்து ராஜ் டிவி, கலைஞர் டிவி போன்ற தொலைக்காட்சியிலும் பணியாற்றினார். பேச்சுத் திறமைக்க்கவே ரசிகர்கள் இன்று வரை இவரை கொண்டாடி வருகின்றனர். இவர் தற்போது இலங்கையில் வசித்து வருகிறார். 




சமீபகாலமாக அப்துல் ஹமீது எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை. இதனால் இவர் உடல்நல குறைவு காரணமாக நேற்று இறந்ததாக வதந்திகள் பரவியது. இதனை அடுத்து உடனே சோசியல் மீடியா முழுவதும் வதந்திகள் தீயாய் பரவ ஆரம்பித்தது. இந்த செய்தியை அறிந்த நண்பர்கள், உறவினர்கள், ரசிகர்கள், என மாறி மாறி போன் செய்து விசாரிக்க தொடங்கியுள்ளனர். 


இந்த நிலையில் அப்துல் ஹமீது தான் இறந்ததாக செய்தி பரவியதற்கு வருத்தம் தெரிவித்து, மனம் கலங்கி அழுது கொண்டே வீடியோ ஒன்றை பதிவிட்டு வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, 


நம் எல்லோரையும் படைத்தாக இறைவன் திருவருள் உங்கள் அனைவர் மீதும் பொழிவதாக.. மாண்டவன் மீண்டு வந்து பேசுகிறானே என்று சிலர் வியந்து நோக்கக் கூடும். இலங்கை நேரப்படி நேற்று நள்ளிரவு முதல் இந்த நிமிடம் வரை நான் நித்திரை கொள்ளவில்லை. அந்த விஷமச் செய்தியைக் கேட்டு ஆயிரம் பல்லாயிரம் அன்புள்ளங்கள் தொலைபேசியில் என்னை அழைத்து என் குரலைக் கேட்ட பின்புதான் நான் உயிரோடு இருப்பதை நிச்சயப்படுத்திக் கொண்டார்கள். 


அதிலும் சிலர் என் குரலைக் கேட்டுக் கதறி அழுததை என்னால் தாங்க முடியவில்லை. 'இத்தனை ஆயிரம் அன்புள்ளங்களை நான் பெற என்ன தவம் செய்து ஈன்றாளோ என் அன்னை' என்று நினைத்துக் கொண்டேன். நேற்று இலங்கை பத்திரிகைகளில் நான் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அதன் ஆரம்பம் இப்படித்தான் இருந்தது மரணம் மனிதனுக்குத் தரும் வரம். அவனைப் பற்றிய எதிர்மறையான சிந்தனைகளை எல்லாம் மறக்கச் செய்து, அவனைப் பற்றிய நல்ல பக்கங்களை நல்ல நினைவுகளை மட்டும் இறைமீட்டு பேசி மகிழ்வது' என்று எழுதியிருந்தேன்.


இப்போது அப்படியொரு அனுபவம்தான் எனக்குக் கிடைத்திருக்கிறது. பல்லாயிரம் அன்பு உள்ளங்கள் என்னை நேசித்தாலும், என்னுடைய துறை சார்ந்த பொறாமைக்கு காரணமான அல்லது மத மாச்சரியங்கள் கொண்ட விரல் விட்டு எண்ணக் கூடிய சிலர், இதுவரை காலமும் என்னைப் பற்றிய எதிர்மறையான விமர்சனங்களைப் பரப்பியிருக்கலாம். ஆனால், என்னுடைய இறப்புச் செய்தியைக் கேட்டது என்னைப் பற்றிய நல்ல நினைவுகளை இறை மீட்டி இருக்கிறது. இது நான் வாழும் காலம்வரை தொடர வேண்டும் என்று எல்லோருக்கும் பொதுவான இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.


இப்படிச் செத்துப் பிழைப்பது எனக்கு மூன்றாவது அனுபவம்.  முதல் அனுபவம் 1983ம் ஆண்டு. இனக்கலவரத்தின் போது என்னையும் என் மனைவியையும் உயிரோடு கொளுத்தி எரித்துவிட்டார்கள் என்ற வதந்தி இங்கு இலங்கையில் மட்டுமல்ல தமிழகத்திலும், தமிழ் பத்திரிகைகளிலும் பரவி, கேரளத்து மலையாள பத்திரிகைகளிலும் வெளிவந்ததை என்னுடைய 'வாழ் நாளில் வழிப்போக்கன்' என்னும் நூலில் பதிவு செய்திருந்தேன்.


இரண்டாவது முறை இரண்டு ஆண்டுகளுக்கு முன் யூடியூப் தளத்தில் ஒருவர் அதிக வருமானம் ஈட்ட வேண்டும் என்ற பேராசையில் என்னுடையப் புகைப்படத்தைப் போட்டு, 'பிரபல டிவி தொகுப்பாளர் மரணம். கதறி அழுதது குடும்பம்' என்ற செய்தியைப் பதிவு செய்திருந்தார். 


மூன்றாவது முறை இப்போது சமூகவலைதளங்களில் நான் இறந்துவிட்டதாகச் செய்திகள் பரவியிருக்கிறது. மூன்று முறை நான் உயிர்த்தெழுதிருக்கிறேனா  என்று நகைச்சுவையாகத் தோன்றுகிறது.


நாம் இறந்த பிறகு நம் மீது உண்மையான அன்பு வைத்திருந்தவர்கள் யார் யார் என்பதைப் பார்க்க நாம் இருக்கமாட்டோம். ஆனால், வாழும் காலத்திலேயே அதைக் கணிக்க, அறிந்துகொள்ள இறைவன் எனக்குக் கொடுத்த சந்தர்ப்பம்தான் இது. இந்தச் செய்தியை முதல் முதலில் பரப்பியவருக்கு எத்தனையோ பேர் சாபம் விட்டிருக்கலாம். அந்த சாபங்களிலிருந்து அந்த மனிதரைக் காக்கும் படி அதே இறைவனிடம் நான் வேண்டுகின்றேன். அவர் ஏதோ ஒரு நன்மையைச் செய்திருக்கிறார்.. ஆகவே, அன்புள்ளங்களே எனக்காகப் பிரார்த்தனை செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியும், வணக்கமும் என்று உருக்கத்துடன் பேசி உள்ளார் அப்துல் ஹமீது.