தமிழ்நாட்டிலேயே சிறந்த திருநங்கை யார் தெரியுமா?.. அசத்திய சந்தியா.. கெளரவித்த முதல்வர் ஸ்டாலின்

Meenakshi
Jul 29, 2024,05:06 PM IST

சென்னை: திருநங்கைகளின் நலனிற்காக சிறப்பான சேவை புரிந்ததற்காக  கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை சந்தியா தேவிக்கு 2024ம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கைக்கான விருதினை முதல்வர் ஸ்டாலின் வழங்கி வாழ்த்தியுள்ளார்.


திருநங்கையர்களின் நலன் காத்திட கழக அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்கள்  குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில்  இது தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:




மூன்றாம் பாலினத்தவர் என்ற பெயருக்கு மாற்றாக அவர்களின் சுயமரியாதையை காக்கும் வகையில் திருநங்கை என்ற பெயரினை முத்தமிழ் அறிஞர் கலைஞர் அறிமுகப்படுத்தினார். திருநங்கைகளுக்கு சமூக மற்றும் பொருளாதார ஆதரவை வழங்கிய அவர்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்திட 2008 ஆம் ஆண்டு முத்தமிழ் அறிஞர் கலைஞர் தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியத்தை தோற்றுவித்தார். நல வாரியத்தின் வாயிலாக அவர்களுக்கு உயர்கல்விக்கான உதவித்தொகை, தொழில் சார்ந்த திறன் மேம்பாட்டு பயிற்சி, சுய தொழில் புரிந்திட மானியம், 40 வயதிற்கு மேற்பட்ட ஆதரவற்ற திருநங்கைகளுக்கு ரூபாய் 1500 மாதாந்திர ஓய்வூதிய தொகை, திருநங்கைகள் உயர் கல்வி பயின்றிட கல்வி கனவு திட்டம் போன்ற பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.


கழக அரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதனால் வரை 9,080 திருநங்கைகளுக்கு நல வாரியத்தின் மூலமாக அடையாள அட்டை வழங்கப்பட்டதோடு, 617 திருநங்கைகளுக்கு சுய தொழில் புரிய மானியமும், 1599 ஆதரவற்ற திருநங்கைகளுக்கு மாதாந்திர ஓய்வூதியமும், கட்டணம் இல்லா பேருந்து பயணத்திட்டமான விடியல் பயணத் திட்டத்தில் திருநங்கைகள் 29.74 லட்சம் கட்டணம் இல்லா பேருந்து பயணம் மேற்கொண்டுள்ளனர்.


திருநங்கைகளின் நலனுக்காக சிறப்பான முறையில் சேவைப் புரிந்து அவர்களுக்குள் முன்மாதிரியாக திகழும் திருநங்கை ஒருவர் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவால் தேர்வு செய்யப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் திருநங்கைகள் தினமான ஏப்ரல் 15 ஆம் நாளில் அவர்களை சிறப்பிக்கும் பொருட்டு சிறந்த திருநங்கை விருது கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதிற்கு தேர்ந்தெடுக்கப்படும் திருநங்கைக்கு ஒரு லட்சம் ரூபாய் காண காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழும் வழங்கப்படுகிறது.




கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையைச் சேர்ந்த திருநங்கை சந்தியா தேவி பூ கட்டும் தொழில் செய்து தன் வாழ்க்கையை நடத்தி வருகிறார். வில்லிசையில் ஆர்வம் ஏற்பட்டு புராணக் கதைகளை படித்து தன் தனித்திறமையால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வில்லிசை நிகழ்ச்சிகளை தமிழ்நாடு மற்றும் கேரளாவில் நடத்தியுள்ளார். வில்லிசை நிகழ்ச்சி மூலம் கொரோனா விழிப்புணர்வு, சமூக நலத்திட்டங்கள், வரதட்சனை தடுப்பு, பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். பல திருநங்கைகளுக்கு சுயமாக வருமானம் ஈட்டும் வகையில் வில்லிசை கற்றுக் கொடுத்து கிராமிய கலைகளில் ஈடுபட உதவி வருகிறார்.


 தோவாளையைச் சார்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் ஒரு ஏழை சிறுவனின் படிப்பிற்கான அனைத்து செலவுகளையும் பொறுப்பேற்றுக் கொண்டதோடு, 8 வயது மனவளர்ச்சி குன்றிய ஒரு குழந்தையை தத்தெடுத்து பராமரித்து வருகிறார். இவ்வாறு திருநங்கைகள் சமூகத்திற்கு முன்மாதிரியாக திகழ்ந்த திருநங்கைகளின் முன்னேற்றத்திற்காக வில்லிசைன் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி சேவை புரிந்து வரும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை சந்தியா தேவி 2024 ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருதிற்கு தேர்வு செய்யப்பட்டார். அவரது சேவையை பாராட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் இன்றைய தினம், திருநங்கை சந்தியா தேவிக்கு சிறந்த திருநங்கை விருது, ரூபாய் ஒரு லட்சம் காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் பி.கீதாஜீவன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.