வயநாட்டை உலுக்கிய நிலச்சரிவு.. இயற்கையின் தாண்டவம்.. கண்ணீர் தேசமான கடவுளின் தேசம்.. என்ன நடந்தது?

Su.tha Arivalagan
Jul 30, 2024,07:02 PM IST

திருவனந்தபுரம்: இயற்கையின் விளையாட்டுக்கு முன்பு மனிதனின் விளையாட்டு மிக மிக சாதாரணமானது.  அழகிய தேசமான கேரளாவை இன்று அந்த இயற்கை சிதைத்துப் போட்டு வேதனைக்குள்ளாக்கியுள்ளது.


கேரளாவே மிகப் பெரிய சுற்றுலா பூமிதான்.. கடவுளின் தேசமாக கூறப்படுவது கேரளா. அருமையான மலைகள், அழகான நீர் வீழ்ச்சிகள், கண்ணைக் கவரும் பச்சைப் படலம் போர்த்திய அற்புத பூமிதான் கேரளா. இன்று பல உயிர்களைப் பறி கொடுத்து சோகத்தில் மூழ்கியுள்ளது கேரளா.


இத்தனை காலமாக வியந்து பார்த்த,  பார்த்து ரசித்த, ரசித்து மகிழ்ந்த இடங்கள் மண்ணோடு புதைந்து போயுள்ளன. கூடவே தனது பிள்ளைகளையும் சேர்த்து தனக்குள் இழுத்துக் கொண்டு துடிக்க வைத்துள்ளது இயற்கை.




கேரளாவின் மிகச் சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றுதான் வயநாடு.  தமிழ்நாட்டின் நீலகிரி மற்றும் கர்நாடகத்துடன் எல்லையைக் கொண்ட ரம்மியமான மாவட்டம்தான் வயநாடு. இந்த மாவட்டம்தான் இன்று இயற்கையின் கோர தாண்டவத்தில் சிக்கி சிதையுண்டுள்ளது. கிட்டத்தட்ட நீலகிரி மாவட்டத்திலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில்தான் இந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது. அடுத்தடுத்து நடந்த நிலச்சரிவால் பல கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.


முண்டக்கை, சூரல் மலை, வெள்ளரி மலை ஆகியவை கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. இங்கு ஏற்பட்ட நிலச்சரிவால் இதன் அடிவாரத்தில் உள்ள கிராமங்கள் பெரும் பேரழிவை சந்தித்துள்ளன. நூற்றுக்கணக்கானோரின் உயிர்கள் பறி போயுள்ளன. பல நூறு வீடுகள் புதையுண்டு கிடக்கின்றன. காட்டாற்று வெள்ளத்தால் கிராமங்கள் சின்னாபின்னமாகியுள்ளன.


வயநாடு மாவட்டத்தில் ஏராளமான மலைகள் உள்ளன. மிகச் சிறந்த நீர் வீழ்ச்சிகளும் இங்கு அதிகம். மலையேற்றக் குழுக்கள் அடிக்கடி வர விரும்பும் ஒரு மாவட்டம் வயநாடு. இதனால்தான் இப்போதைய நிலச்சரிவிலும் கூட ஏராளமான சுற்றுலாப் பயணிகள் சிக்கிக் கொண்டுள்ளனர்.


இருவழிஞ்சிப்புழா என்ற ஆற்றில் ஏற்பட்ட மிகப் பெரிய வெள்ளப் பெருக்கும் கூட இந்த நிலச்சரிவுகளுக்கு முக்கியக் காரணமாக கூறப்படுகிறது. மேலும் மலைப் பகுதிகளில் ஏற்பட்ட பெரு மழை மற்றும் வெள்ளம் காரணமாக பாறைகள், மரங்கள் உள்ளிட்டவை  அடித்துக் கொண்டு ஊருக்குள் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டன. மலையில் உள்ள பல்வேறு ஆறுகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதும் மக்களை பாதித்து விட்டது.


வெள்ளரிமலை




இது கோழிக்கோடு மாவட்டத்தின் கீழ் வருகிறது. இயற்கை எழில் சூழ்ந்த மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ளது இந்த மலைப் பகுதி.  வயநாடு வனப் பகுதிக்குட்பட்ட மலைப் பகுதி இது. மிக நீளமான பரந்து விரிந்த காடும் கூட. இங்கு டிரெக்கிங் மிகவும் பிரபலமாகும். அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருவார்கள். அழகான நீர் வீழ்ச்சிகள், ஆறுகள், பெரிய பெரிய குன்றுகள், மலை முகடுகள் என பார்க்கவே அட்டகாசமான பகுதி இது. இந்த மலைப் பகுதியிலேயே மிகவும் உயரமான மலைப் பகுதி வவுல் மலைதான். இது 2339 மீட்டர் உயரத்தில் உள்ளது. நீலகிரிக்கு வடக்கே, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியிலேயே மிகவும் உயரமான சிகரம் இந்த வவுல் மலைதான்.


இந்த வெள்ளரிமலையில் ஏற்பட்ட மிகப் பெரிய மழை காரணமாக இந்த மலைப் பகுதியிலும் மிகப் பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டு பெரும் நாசத்தை ஏற்படுத்தியுள்ளது.


சூரல்மலை




இது ஒரு சிறிய கிராமப் பகுதி. மலையின் மீது அமைந்துள்ளது. ஏகப்பட்ட சுற்றுலாத் தலங்கள் இந்தப் பகுதியைச் சுற்றிலும் உள்ளன. ஆனால் பல இடங்களுக்கு உள்ளூர்க்காரர்கள் மட்டுமே போக முடியும். வெளியூர்க்காரர்களுக்குத் தெரியாத பல இடங்கள் இங்கு உள்ளன. சூச்சிப்பாறை நீர்வீழ்ச்சி அனைவரும் வந்து போகும் இடமாகும். சூப்பரான இடம் இது. 


சீதா ஏரி, வட்டப்பாறை, வெள்ளொளிப் பாறை, ஹாலிவுட் வேலி, அப்சரா நீர்வீழ்ச்சி ஆகியவை இந்தப் பகுதியில் உள்ள சில சிறந்த சுற்றுலாத் தலங்கள். எல்லாமே 5 முதல் 6 கிலோமீட்டர் தூரத்திற்குள்தான் உள்ளன. இந்தப் பகுதி வழியாக நிலம்பூர் - சூரல்மலை - நஞ்சன்கூடு ரயில் பாதை செல்கிறது. மலப்புரம் மாவட்டத்தில் உள்ள முண்டேரிக்கும், சூரல்மலைக்கும் இடையே கிட்டத்தட்ட 7 கிலோமீட்டர் தூரம்தான் உள்ளது. இந்த மலைப் பகுதியும் நிலச்சரிவில் சிக்கி பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.


முண்டக்கை


முண்டக்கை பகுதியானது ஏராளமான காபி, தேயிலைத் தோட்டங்கள் நிறைந்த பகுதியாகும். நீர்வீழ்ச்சிகளுக்கும் இங்கு பஞ்சமில்லை. கல்பேட்டாவிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும், மேப்பாடியிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலும் முண்டக்கை உள்ளது. இந்தப் பகுதிதான் நிலச்சரிவில் பெரும் சேதத்தை சந்தித்துள்ளது. 


எப்படி நேர்ந்தது நிலச்சரிவு?




தொடர்ந்து இந்தப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே கன மழை பெய்து வந்துள்ளது. கன மழை காரணமாகவும், நீர்வீழ்ச்சிகள், ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதாலும் மக்கள் பலர் ஏற்கனவே பாதுகாப்பான இடங்களுக்குப் போய் விட்டனர். கணிசமானோர் மட்டுமே கிராமங்களில் தங்கியிருந்தனர்.


இன்று அதிகாலை  4 மணியளவில் முதல் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் பெரும் வெள்ளம் அடித்துக் கொண்டு ஊருக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்த ஆரம்பித்தது. அதைத் தொடர்ந்து மேலும் சில நிலச்சரிவுகள் ஏற்படவே மக்கள் ஸ்தம்பித்துப் போய் விட்டனர். சுதாரித்துக் கொண்டு தப்புவதற்குள் வீடுகளும், மக்களும் நிலச்சரிவில் சிக்கிக் கொண்டு விட்டனர்.


தற்போது நிலச்சரிவுக்குள்ளான முண்டக்கை பகுதியானது, தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூரிலிருந்து கிட்டத்தட்ட 50 கிலோமீட்டர் தூரத்தில்தான் உள்ளது. எனவே கேரள நிலச்சரிவு நமக்கும் கூட ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். மலைப் பகுதிகளில் இயற்கையை சீரழித்து கட்டடங்கள் கட்டுவது உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.


ஒரு பேரழிவிலிருந்து நாம் பாடம் கற்றுக் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விடுவது எதிர்காலத்தில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் ஏற்படும்போது பாதிப்பை குறைக்க உதவும்.