"கூல்" தோனியோட ஜெர்சி நம்பர் 7க்கு ஓய்வு.. இனிமேல் யாருக்கும் அது கிடையாது!

Su.tha Arivalagan
Dec 15, 2023,12:04 PM IST

மும்பை: கூல் கேப்டன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்று விட்ட நிலையில் அவர் அணிந்து வந்த டீம் இந்தியாவின் 7ம் எண் ஜெர்சிக்கும் இந்திய கிரிக்கெட் வாரியம் ஓய்வு கொடுத்து விட்டது. இனிமேல் அந்த எண் யாருக்கும் கொடுக்கப்பட மாட்டாது.


தோனிக்கு கெளரவம் அளிக்கும் வகையில் இந்த முடிவை இந்திய கிரிக்கெட் வாரியம் எடுத்துள்ளது. தோனி என்றதுமே அவர் இந்திய அணியில் இடம் பெற்றருந்தபோது அணிந்திருந்த இந்த 7ம் எண் ஜெர்சியும் தான் கூடவே நினைவுக்கு வரும்.


ஐசிசி தொடர்களில் மிகவும் வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்தவர் தோனி. ஐசிசியின் அனைத்துக் கோப்பைகளையும் வென்ற ஒரே இந்திய கேப்டன் இவர்தான். அந்த சாதனையை அத்தனை சீக்கிரம் யாராலும் தகர்க்க முடியாது.




சர்வதேச அளவில் ஒரு நாள், டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்று விட்டார் தோனி. ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே அவர் தற்போது ஆடி வருகிறார். இந்த நிலையில் அவரது ஜெர்சிக்கும் ஓய்வளித்துள்ளது பிசிசிஐ. ஏற்கனவே சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்ற பின்னர் அவர் அணிந்து வந்த 10ம் எண் ஜெர்சிக்கும் இதேபோல ஓய்வளித்தது  பிசிசிஐ என்பது நினைவிருக்கலாம்.


இந்த முடிவை இந்திய அணிக்கும் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. 10ம் எண்ணை எப்படி வீரர்கள் தேர்வு செய்ய முடியாதோ அதேபோல இனிமேல் 7ம் எண்ணையும் வீரர்கள் தேர்வு செய்ய முடியாது. 


ஆரம்பத்தில் சச்சின் டெண்டுல்கரின் ஜெர்சி ஓய்வளிக்கப்படாமல் இருந்தது. அந்த சமயத்தில் ஷர்துள் தாக்கூர் ஒரு போட்டியில் சச்சினின் 10ம் எண் ஜெர்சியை அணிந்து விளையாடினார். இதையடுத்து சச்சின் ரசிகர்கள் அதற்கு ஆட்சேபனை தெரிவித்தனர். இதையடுத்தே 10ம் எண்ணுக்கு ஓய்வளிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது தோனிக்கும் அதே கெளரவம் அளிக்கப்பட்டுள்ளது.


தற்போது வீரர்கள் தங்களுக்குப் பிடித்த எண்ணைத் தேர்வு செய்வதற்கு வசதியாக 60 எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.