தலைமைப் பயிற்சியாளராக கெளதம் கம்பீர் நியமனம்.. இனி இந்திய கிரிக்கெட் அணி இவரது பொறுப்பில்!

Su.tha Arivalagan
Jul 09, 2024,09:20 PM IST

டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக கெளதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் ஜெய்ஷா இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருந்து வந்தார். சமீபத்தில் நடந்த டி2- உலகக் கோப்பைப் போட்டித் தொடருடன் ராகுல் டிராவிட் ஓய்வு பெற்றார். டிராவிடின் பயிற்சியின் கீழ் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி 2வது டி20- உலகக் கோப்பையை வென்று சாதனையும் படைத்தது. இந்த சாதனையுடன் டிராவிட் ஓய்வு பெற்றார். அதேபோல சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் ஓய்வை அறிவித்தனர்.




இந்த நிலையில் தற்போது இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கெளதம் கம்பீர் நியமிக்கப்பட்டிருப்பதாக ஜெய்ஷா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், இந்திய அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக கெளதம் கம்பீரை வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். நவீன கால கிரிக்கெட் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த மாற்றத்தை வெகு அருகே பார்த்து வருபவர் கெளதம் கம்பீர். தனது கிரிக்கெட் வாழ்க்கையில் பல்வேறு நிலைகளில் சிறப்பாக செயல்பட்டவர் கம்பீர். இந்திய கிரிக்கெட்டை மேலும் முன்னேற்றப் பாதையில் எடுத்துச் செல்வதில் கம்பீர் சிறப்பாக செயல்படுவார் என்று நம்புகிறேன். அவரது பார்வை தெளிவானது. அவரது அனுபவம் மிகப் பெரியது.  எனவே இந்தப் பொறுப்புக்கு மிகவும் தகுதியானவர் கம்பீர்.  கம்பீர் தனது புதிய பயணத்தைத் தொடங்குவதில் பிசிசிஐ மகிழ்ச்சி அடைகிறது, உறுதுணையாக என்றும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெய்ஷா.


42 வயதாகும் கெளதம் கம்பீர் டெல்லியைச் சேர்ந்தவர். டெல்லி அணிக்காக ரஞ்சி கோப்பைப் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதுதவிர ஐபிஎல்லில் டெல்லி டேர்டெவில்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார். 58 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4154 ரன்களைக் குவித்துள்ளார். 9 சதங்கள், 22 அரை சதங்களையும் விளாசியுள்ளார். அதிகபட்ச ஸ்கோர் 206 ரன்களாகும். 147 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள கம்பீர், 5238 ரன்களைக் குவித்துள்ளார். அதிகபட்ச ஸ்கோர் 150 ஆகும். 11 சதம், 34 அரை சதங்களை ஒரு நாள் போட்டிகளில் எடுத்துள்ளார். டி20 போட்டிகளைப் பொறுத்தவரை 37 போட்டிகளில் மட்டுமே கலந்து கொண்டுள்ள அவர், 932 ரன்களை எடுத்துள்ளார். 7 முறை அரை சதம் விளாசியுள்ளார். அதிகபட்ச ஸ்கோர் 75 ரன்களாகும்.


இந்தியா வென்ற 3 முக்கியமான சர்வதேச கோப்பைகளில் கம்பீருக்கும் முக்கியப் பங்குண்டு. 2011 ஒரு நாள் உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்டவர் கம்பீர். குறிப்பாக இறுதிப் போட்டியில் அட்டகாசமாக விளையாடினார். அந்த உலகக் கோப்பையை இந்தியா வென்று சாதனை படைத்திருந்தது. அடுத்து 2007 ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரையும் இந்தியா வென்றது. அதிலும் கம்பீர் இடம் பெற்றிருந்தார். அதேபோல 2010ல் இலங்கையில் நடந்த ஆசியா கோப்பைத் தொடரிலும் இந்தியா வென்று சாம்பியன் ஆனது. அந்த அணியிலும் கம்பீர் இடம் பெற்றிருந்தார்.