வங்கதேச கலவரத்தில் சிக்கித் தவிக்கும்..தமிழர்களுக்கு உதவ.. தமிழக அரசு உதவி எண்கள் அறிவிப்பு!
டாக்கா: வங்கதேசத்தில் அரசு பணிகளில் 30 சதவீதம் இட ஒதுக்கீடை கண்டித்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இந்தப் போராட்டத்தில் சிக்கித் தவித்து வரும் தமிழர்களின் குடும்ப உறுப்பினர்கள் தொடர்புகொள்ள தமிழக அரசின் அயலக நலத்துறை கட்டணமில்லா உதவி எண்களை அறிவித்துள்ளது.
இந்தியாவிற்குள் வாழும் தமிழர்கள் +91 18003093793 என்ற எண்ணையும், வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் +918069009900, மற்றும் +918069009901 என்ற உதவி எண்கள் மூலமும் தொடர்பு கொள்ளலாம். இது கட்டணமில்லாத தொலைபேசி எண்களாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
1971 ஆம் ஆண்டு வங்கதேச விடுதலைக்காக போராடிய சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகள் மற்றும் உறவினர்களுக்கு அரசு வேலைகளில் 30 சதவிகிதம் இட ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. இந்த இட ஒதுக்கீடை எதிர்த்து போராட்டம் நடத்தி வந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
இருப்பினும் மீண்டும் கடந்த ஐந்தாம் தேதி அரசு துறையில் 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் நடைமுறையை அந்நாட்டு உயர் நீதிமன்றம் நடைமுறைப்படுத்தியது. தொடர்ந்து உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து 30 சதவிகித இட ஒதுக்கீடு கண்டித்து மாணவர்கள் கடந்த இரண்டு வாரமாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் தற்போது கலவரமாக மாறி உள்ளது. இதன் எதிரொலியாக தற்போது பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இணைய சேவையும் ரத்து செய்யப்பட்டது.
இந்தப் போராட்டத்தை உடனடியாக கைவிட மாணவர்களிடையே சமரசம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் ஆனால் இதற்கு மாணவ அமைப்பினர் மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து போலீசார் கண்ணீர் புகை வீசியும் தடியடி நடத்தியும் போராட்டங்களை களைய முயற்சி செய்தனர். இதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு அங்குள்ள பல்வேறு பொருட்கள் சேதம் ஆகின. இதனால் மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட கலவரத்தில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக அங்கு பதட்டமான சூழல் நிலவி வருகிறது.
இதற்கிடையே மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஊரடங்கு சட்டமும் அமல்ப்படுத்தப்பட உள்ளதாக அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இந்த கலவரத்தில் தமிழக மாணவர்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு உதவி செய்யும் வகையில் தமிழக அரசு உதவி எண்களை வழங்கி உள்ளது. இது குறித்து முதல்வர் மு க ஸ்டாலின் கூறுகையில், வங்கதேசத்தில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. தமிழர்கள் சிலர் தாயகம் திரும்ப முடியாமல் சிக்கித் தவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை கருத்தில் கொண்டு வங்கதேசத்தில் வாழும் தமிழர்களுக்கு உதவி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அங்கு நிலவும் பதட்டமான நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனால் தமிழர்களின் விவரங்களை அறிந்து விரைவில் உதவிகளை வழங்க வேண்டும். தமிழர்களின் குடும்ப உறுப்பினர்கள் அயலக தமிழர் நலத்துறையின் கட்டணமில்லா எண்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் வங்கதேசத்தில் வாழும் தமிழர்களுக்கு தமிழக அரசு உதவிகளை செய்ய தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.