Bangalore Bandh: கொதிக்கும் காவிரி.. தகிக்கும் கன்னட அமைப்புகள்.. பிசுபிசுத்தது பந்த்!

Su.tha Arivalagan
Sep 26, 2023,09:34 AM IST
பெங்களூரு: காவிரி பிரச்சினை தொடர்பாக கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்த பெங்களூர் பந்த்  போராட்டத்துக்குப் போதிய ஆதரவு கிடைக்காததால் அது பிசுபிசுத்தது.

தமிழ்நாடு பஸ்கள் வராததால் ஓசூர் சாலை மட்டுமே வெறிச்சோடிக் காணப்பட்டது. தமிழ்நாட்டிலிருந்து பஸ்கள், லாரிகள் போன்ற பெரிய வண்டிகள் எதுவும் வரவில்லை. இதனால் இந்த சாலையில் போக்குவரத்து குறைந்து காணப்பட்டது.

மற்றபடி பெங்களூர் முழுவதும் பஸ்கள் ஓடுகின்றன, ஹோட்டல்கள் திறக்கப்பட்டுள்ளன. இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்ததால் அவை மூடப்பட்டிருந்தன. பெரும்பாலான தனியார் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு ஒர்க் பிரம் ஹோம் ஆப்ஷனை இன்று கொடுத்திருந்ததால் பலரும் வீட்டிலிருந்தபடியே வேலை பார்த்தனர்.

தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறக்கக் கூடாது என்று கூறி பல்வேறு கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இன்று பெங்களூர் பந்த் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன.  சில இடங்களில் கடைகள் மூடப்பட்டிருந்தன. அதேசமயம், மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்கள், மருந்துக் கடைகள், பெட்ரோல் நிலையங்கள் ஆகியவை திறந்துள்ளன. அவற்றுக்குப் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பெங்களூரு  முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 144 போலீஸ் தடை உத்தரவும் பிறப்பிக்க்பட்டுள்ளது. 5 பேருக்கு மேல் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஏதாவது பிரச்சினையைச் சந்தித்தால் 112ம் எண்ணை அழைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.