பேகம் கலிதா ஜியா வெளியே வருகிறார்.. இன்று இடைக்கால ஆட்சி.. வங்கதேசத்தில் அடுத்தடுத்து பரபரப்பு!
டாக்கா: வங்கதேசத்தில் இன்று ராணுவத்தின் உதவியுடன் புதிய இடைக்கால ஆட்சி அமையவுள்ளது. இந்த நிலையில் ஷேக் ஹசீனாவின் போட்டியாளரும், அவரால் சிறையில் அடைக்கப்பட்டவருமான முன்னாள் பிரதமர் பேகம் கலிதா ஜியாவை விடுதலை செய்ய வங்கதேச ஜனாதிபதி முகம்மது சஹாபுதீன் உத்தரவிட்டுள்ளார். இதனால் கலிதா ஜியா மீண்டும் லைம்லைட்டுக்கு வருகிறார்.
வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவுக்கு எதிராக வங்கேதச்சில் பெரும் மக்கள் புரட்சி வெடித்தது. வெகுண்டு எழுந்து போராடிய மக்கள் போராட்டத்தால் நாடே நிலைகுலைந்து போயுள்ளது. வேலையில்லாத் திண்டாட்டம், அரசு கொண்டு வந்த பாரபட்சமான இட ஒதுக்கீடு உள்ளிட்டவற்றால் இளைஞர்கள், மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். இது பெரும் வன்முறையாக, கலவரமாக மாறியது.
ஷேக் ஹசீனாவின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் ஏற்பட்டதால் அவரது குடும்பத்தினர் அவரை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வைத்துள்ளனர். தற்போது ஷேக் ஹசீனா தனது தங்கை ரஹனாவுடன் இந்தியாவுக்கு வந்துள்ளார். இங்கிலாந்தில் தஞ்சமடைய அவர் அரசியல் புகலிடம் கோரியுள்ளார். அது கிடைத்தவுடன் அவர் இந்தியாவிலிருந்து கிளம்புவார் என்று தெரிகிறது.
இந்த நிலையில் வங்கதேசத்தில் ராணுவத்தின் உதவியுடன் இடைக்கால ஆட்சி அமையவுள்ளது. இன்று புதிய அரசு பதவியேற்கவுள்ளது. புதிய அரசியல் வங்கதேச தேசிய கட்சி, ஜமாத் இ இஸ்லாமி உள்ளிட்ட கட்சிகள், பல்துறை பிரபலங்கள் பங்கேற்கவுள்ளனர். ராணுவத்திலிருந்தும் சிலர் ஆட்சியில் இடம் பெறவுள்ளனர். அடுத்த தேர்தல் நடைபெறும் வரை இந்த அரசு ஆட்சியில் இருக்கும் என்று தெரிகிறது.
வெளியே வருகிறார் கலிதா ஜியா
இதற்கிடையே, மற்றொரு திருப்பமாக ஷேக் ஹசீனாவில் சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் பிரதமரும், அவரது பரம்பரை வைரியுமான பேகம் கலிதா ஜியாவை சிறையிலிருந்து விடுவிக்க ஜனாதிபதி சஹாபுதீன் உத்தரவிட்டுள்ளார். இதனால் கலிதா ஜியா தலைமையில் புதிய அரசு அமையுமா என்ற பரபரப்பும் கூடியுள்ளது.
ராணுவ தளபதி வக்கார் உஸ் ஜமான், முப்படைத் தளபதிகள், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் ஜனாதிபதி நடத்திய ஆலோசனைக்குப் பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் மாணவர் போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுவிக்கவும் இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
பரம்பரை மோதல்
கலிதா ஜியாவுக்கும், ஷேக் ஹசீனாவுக்கும் இடையே காலம் காலமாக மோதல் நிலவுகிறது. இருவரில் யார் ஆட்சியில் இருந்தாலும் சரி, மற்றவருக்கு குடைச்சல் கொடுக்கத் தவறியதில்லை. ஷேக் ஹசீனா பிரதமரானதும் ஊழல் வழக்கில் கலிதா ஜியாவை கைது செய்தார். அவருக்கு 17 வருட கால சிறைத் தண்டனையும் கொடுக்கப்பட்டது. 2018ம் ஆண்டு முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் கலிதா ஜியா. 78 வயதாகும் அவரது உடல் நிலை மோசமாக இருந்து வந்தது. இதனால் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
வங்கதேசம் உருவாகக் காரணமானவரும், வங்கதேச தந்தை என்று அழைக்கப்படுபவருமான ஷேக் முஜிபுர் ரஹ்மானின் மகள்தான் ஷேக் ஹசீனா. வங்கதேசம் பிறப்பதற்கு முன்பு கிழக்கு பாகிஸ்தானாக அது இருந்தபோது பாகிஸ்தான் ராணுவத்தில் இணைந்து பணியாற்றிய கமாண்டர் தான் ஜியாவுர் ரஹ்மான். இவரது மனைவிதான் கலிதா ஜியா. இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் 2வது காஷ்மீர் போரில் இந்தியாவுக்கு எதிராக படைக்குத் தலைமை தாங்கி நடத்தியவர் இந்த ஜியாவுர் ரஹ்மான்.
வங்கதேச விடுதலைப் போருக்குப் பின்னர், இந்தியாவின் உதவியுடன் அந்த நாடு பிறந்தபோது அந்த விடுதலையை வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு அறிவித்தவர் ஜியாவுர் ரஹ்மான். அதன் பின்னர் முஜிபுர் ரஹ்மான் ஜனாதிபதி ஆனார். அவரது ஆட்சியில் ராணுவத் தலைமைத் தளபதியானார் ஜியாவுர் ரஹ்மான்.
முஜிபுர் ரஹ்மான் இந்தியாவுக்கு சாதகமானவர். இந்தியாவுடன் இணைந்து செயல்பட விரும்பியவர். இந்தியா செய்த உதவிகளுக்கு நன்றிக் கடன் பட்டிருப்பதாக எப்போதும் கூறி வந்தவர். ஆனால் ஜியாவுர்ரஹ்மான் அப்படி இல்லை. அவருக்கு இந்தியாவைப் பிடிக்காது. இதனால் அவருக்கும், முஜிபுர் ரஹ்மானுக்கும் இடையே முட்டல் மோதல் வந்தது. இதன் விளைவு ராணுவப் புரட்சி வெடித்தது. முஜிபுர் ரஹ்மான் கொல்லப்பட்டார். அவரது படுகொலை மிகப் பரபரப்பாக அப்போது பேசப்பட்டது. அவரது குடும்பத்தினர் பலருடன் சேர்த்து முஜிபுர் ரஹ்மான் படுகொலை செய்யப்பட்டார்.
முஜிபுர் ரஹ்மான் படுகொலைக்குப் பிறகு ஜனாதிபதி பதவியைக் கைப்பற்றினார் ஜியாவுர் ரஹ்மான். ராணுவ ஆட்சியை வங்கதேசத்தில் நிறுவினார். அதேசமயம், வங்தேசத்தில் நடந்த பல நல்ல விஷயங்களுக்கு இவர் வித்திட்டார் என்பதையும் மறுக்க முடியாது. மேலை நாடுகள், சீனாவுடன் உறவை வலுப்படுத்தினார். இந்தியாவிடமிருந்து தள்ளியே இருந்தார். நீர்ப்பாசனத் திட்டம் உள்ளிட்டவற்றை வலுவாக்கினார். வங்கதேச மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார்.
இந்தியாவுக்கு நல்லதல்ல!
ஜியாவுர் ரஹ்மான் ராணுவ தளபதியாக இருந்ததால் அவரது ஆட்சியில் கெடுபிடிகள் அதிகம் இருந்தது. அவருக்கு எதிராக ஏகப்பட்ட புரட்சிகள் வெடித்தன. ஆனால் எல்லாவற்றையும் அவர் இரும்புக் கரம் கொண்டு அடக்கினார். இறுதியில் 1981ம் ஆண்டு அவர் படுகொலை செய்யப்பட்டார். தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பான சார்க் அமைப்பு உருவாக முக்கியக் காரணமாக இருந்தவர்களில் ஜியாவும் ஒருவர். இவர் உருவாக்கிய யோசனையின் அடிப்படையில்தான் வங்கதேச தலைநகர் டாக்காவில் 1985ம் ஆண்டு சார்க் அமைப்பு தொடங்கப்பட்டது.
முஜிபுர் ரஹ்மான் - ஜியாவுர் ரஹ்மான் இடையிலான மோதல் பின்னாளில் ஷேக் ஹசீனா - கலிதா ஜியா மோதலாக உருவெடுத்தது. இன்று ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார், கலித் ஜியா மீண்டும் வெளிச்சத்திற்கு வருகிறார். வங்கதேச தேசியக் கட்சி எப்போதுமே இந்தியாவுக்கு உகந்த கட்சியாகவும், ஆட்சியாகவும் இருந்தது இல்லை. அதேபோல ஜமாத் இ இஸ்லாமி கட்சியும் பாகிஸ்தான் ஆதரவு கட்சியாகும். எனவே தற்போது வங்கதேசத்தில் நடந்து வரும் நிகழ்வுகள் எதுவுமே, இந்தியாவுக்கு சாதகமானவை அல்ல.. எனவே வங்கதேச நிகழ்வுகளை இந்தியா உற்று நோக்கி வருகிறது.