பாக்கெட் சாராயத்தை ஊத்து.. STOP... புதுச்சேரியில் இனிமேல் விற்பனை கிடையாது.. தடை!
புதுச்சேரி: புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பாக்கெட் சாராயம் விற்க தடை விதித்து யூனியன் பிரதேச கலால்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பாக்கெட்டுகளில் சாராயம் அடைத்து விற்கப்பட்டு வருகிறது. இந்த பாக்கெட் சாராயம் புதுச்சேரியில் மட்டும் இன்றி அண்டைய மாநிலங்களில் உள்ளவர்களும் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 2019ம் ஆண்டு முதல் புதுச்சேரியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றச்சூழல் துறை தடை விதித்து உத்தரவிட்டது.
அதனைத் தொடர்ந்து, புதுச்சேரி மற்றும் காரைக்கால் சாராயக்கடை உரிமையாளர்கள் சங்கத்தினர், மீண்டும் பாக்கெட்டில் சாராயம் அடைத்து விற்பனை செய்ய கலால் துறையிடம் அனுமதி கோரியிருந்தனர். கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி பாக்கெட் சாராய விற்பனைக்கு அனுமதி வழங்கியிருந்தது. இந்நிலையில், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பாக்கெட் சாராயம் விற்க தடை விதித்து கலால்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி, புதுச்சேரி அரசு அறிவியல் தொில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை கலால்துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தில், புதுச்சேரியில் கடந்த 2019ம் ஆண்டு முதல் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் ஒருமுறை பயனபடுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இது ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் சாராய பாக்கெட்டுகளுக்கும் பொருந்தும் என்றும் தெரிவித்துள்ளது.
புதுவை அரசு அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் உத்தரவின்படி, ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை இருப்பதை சுட்டிக்காட்டி பாக்கெட் சாராய விற்பனைக்கு அளிக்கப்பட்டிருந்த அனுமதியை வாபஸ் பெற்றுள்ளது கலால் துறை. இந்த உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்