குற்றாலம் அருவிகளில் வெள்ளப் பெருக்கு குறைந்தது.. ஆனாலும் குளிக்க தடை தொடர்கிறது!

Meenakshi
May 18, 2024,01:21 PM IST

தென்காசி:  கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட பழைய குற்றாலம் அருவியில் குளிப்பதற்கு தடை நீடிக்கிறது. தற்போது அருவியில் வெள்ளப் பெருக்கு வெகுவாக குறைந்துள்ளது.


தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கோடை மழை ஆங்காங்கே பெய்து மக்களை மகிழ்வித்து வருகிறது. இதனால்,  கோடை காலத்திலும் குற்றால அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்தால், சுற்றுலா பயணிகள் அதிகளவில் குற்றாலத்தில் குவிந்தனர். மேற்குதொடர்ச்சி மலைபகுதிகளில் கடந்த  சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக  குற்றால அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.




கனமழையை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றால மெயின் அருவி,ஐந்து அருவிகளில் குளிக்க மக்களுக்கு தடை விதிக்கப்பட்டது. பழைய குற்றால அருவியில் மட்டும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். இந்த அருவியில் நேற்று திடீர் என வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் குளித்துக் கொண்டிருந்த மக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடினர். இந்த காட்டாற்று வெள்ளத்தில், அஸ்வின் என்ற 17 வயது சிறுவன் அடித்து செல்லப்பட்டான். 


இந்த வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. தண்ணீரின் வரத்து அதிகபடியாக இருந்ததால் வெள்ளத்தில் தத்தளித்த சிறுவனை காப்பாற்ற முடியவில்லை. அவனது உடல்தான் கிடைத்தது. பொதுமக்களுக்கு குளிக்காதீர்கள் என்று எச்சரிக்கை விடுத்தும் அவர்கள் அஜாக்கிரதையாக இருந்ததால் இந்த சம்பவம் நடந்ததாக மாவட்ட ஆட்சித் தலைவர் கூறியிருந்தார். இந்த நிலையில் 


குற்றால அருவிகளில் போலீசார் தடுப்பு வேலிகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.  இது குறித்து ஆட்சியர் வெளியிட்ட அறிக்கையில், தென்காசி மாவட்டத்திற்கு மே 21ஆம் தேதி வரை ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் குற்றாலம் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்யக்கூடும் என்பதால் குற்றாலத்தில் உள்ள பிரதான அருவிகளான பழைய குற்றால அருவி, ஐந்தருவி மற்றும் இதர அருவிகளில் பெரும் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது. 


எனவே அருவிகள், அணைப்பகுதிகள் மற்றும் இதர சுற்றுல்லா பகுதிகளில் மறு உத்தரவு வரும் வரை பொதுமக்கள் குளிக்க தடைவித்து ஆணையிடப்பட்டுள்ளது.  தென்காசி மாவட்டத்தில் கனமழை மற்றும் மிக கனமழை காரணமாக ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி எண் - 1077 அல்லது 04633-290548 என்ற எண்களில் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.