சீன என்ஜீனியர்கள் மீது குண்டு வீச்சு.. பலுசிஸ்தானில் பரபரப்பு.. 2 பேர் சுட்டுக் கொலை

Su.tha Arivalagan
Aug 13, 2023,02:57 PM IST

இஸ்லாமாபாத்: பலூசிஸ்தான் போராளிகள் குழு ஒன்று, சீன பொறியாளர்கள் குழு மீது குண்டு வீசித் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. சீன என்ஜீனியர்கள் சென்ற கார்கள் மீது இந்தத் தாக்குதல் நடந்தது. 


தாக்குதல் நடத்தியவர்களில் 2 பேரை பாகிஸ்தான் ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவத்தில் சீனத் தரப்புக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை,  அதேபோல பொதுமக்கள் தரப்பிலும் யாருக்கும் உயிர்ச் சேதம் ஏற்படவில்லை என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.


பலுசிஸ்தானை தனிநாடாக அறிவிக்கக் கோரி அங்கு பல காலமாக போராட்டம் நடந்து வருகிறது. இதுதொடர்பாக அங்கு பல்வேறு குண்டு வெடிப்புகள் உள்ளிட்ட தாக்குதல்களும் அதிகம். இந்த நிலையில் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள கவாடர் என்ற நகரில் சீனப் பொறியாளர்கள் பலர் பல்வேறு அடிப்படைக் கட்டமைப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.




இந்த என்ஜீனியர்களை குறி வைத்து தற்போது பலுசிஸ்தான் போராளிகள் குழு ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளனர். அந்தத் தாக்குதலில் ஈடுபட்ட இருவரை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர். கவடார் நகரமானது ஒரு துறைமுக நகரமாகும். இது சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்திற்கு அருகே உள்ளது. இரு மாகாணங்களையும் இணைக்கும் சிறப்புப் பொருளாதார பிராந்தியத் திட்டத்தை சீனாவின் உதவியுடன் பாகிஸ்தான் அரசு மேற்கொண்டுள்ளது. 


இந்தத் திட்டப் பணிகளில் பெருமளவிலான சீன என்ஜீனியர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்களை குறி வைத்து அவ்வப்போது பலுசிஸ்தான் விடுதலைப் படை என்ற போராளிகள் குழு அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தத் தாக்குதலுக்கும் அதுவே பொறுப்பேற்றுள்ளது.  கவடார் திட்டத்தால் உள்ளூர் மக்களுக்கு எந்த லாபமும் இல்லை என்று அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.


கவடார் திட்டத்துக்கு இந்தியாவின் கண்டனம்


இந்தியாவும் இந்தத் திட்டத்தைத் தொடர்ந்து எதிர்த்து வருகிறது. பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ள காஷ்மீர் வழியாகத்தான் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஜம்மு காஷ்மீர் ஒருங்கிணைந்த இந்தியாவின் பகுதி. அந்த மாநிலத்தில் சீனா அத்துமீறி செயல்படுவதை அனுமதிக்க முடியாது என்று இந்தியா தொடர்ந்து கூறி வருகிறது.


இருப்பினும் இந்தத் திட்டமானது, பிராந்திய பிரச்சினைகளுக்கு அப்பாற்பட்டது என்று சீனா விளக்கம் கொடுத்துள்ளது.