"கேலி பண்றாங்க.. எங்களுக்கு பென்ஷன் கொடுங்க".. வழுக்கையால் பாதிக்கப்பட்டோர் அதிரடி!
Jan 09, 2023,11:25 AM IST
ஹைதராபாத்: வழுக்கைத் தலை கொண்டோர் சேர்ந்து தெலங்கானாவில் ஒரு சங்கம் அமைத்துள்ளனர். பல்வேறு மன உளைச்சல்களுக்கு தாங்கள் ஆளாவதால், அரசு தங்களுக்கு மாதந்தோறும் ரூ. 6000 ஓய்வூதியமாக தர வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தெலங்கானா மாநிலம் சித்திப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தங்கலப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த வழுக்கையால் பாதிக்கப்பட்ட சிலர் சேர்ந்து குழுவாக இயங்கி வருகின்றனர்.இவர்கள் மாநில அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளனர்.
அதில் முக்கியமானது, தங்களுக்கு வழுக்கைத் தலை இருப்பதால் பலரின் கேலி கிண்டல்களுக்கு இலக்காகிறோம். இதனால் மன உளைச்சல் ஏற்படுகிறது. இதனால் சரியான முறையில் வேலைக்கும் போக முடிவதில்லை. எனவே அரசு எங்களுக்கு மாதந்தோறும் ரூ. 6000 ஓய்வூதியமாக தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
சங்கராந்தியையொட்டி இந்த ஓய்வூதியத்தை அறிவித்து எங்களை அரசு மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். ஜனவரி 5ம் தேதி இவர்கள் தங்களது ஊரில் கூட்டம் ஒன்றை நடத்தினர். அடுத்து சங்கராந்தி அன்றும் கூட்டம் போடவுள்ளனராம். அப்போது மேலும் பலர் தங்களுடன் வந்து இணைவார்கள் என்று இவர்கள் தெரிவித்தனர்.
இந்த அமைப்பைச் சேர்ந்த அஞ்சி என்பவர் கூறுகையில், பலரும் எங்களது தலையைப் பார்த்து சிரிக்கிறார்கள். முடி கொட்டிப் போனால் அதற்கு நாங்களா பொறுப்பு.. இது இயற்கையாக நடப்பது.. இப்படிக் கேலி செய்வதால் மனம் வலிக்கிறது. எதற்கெடுத்தாலும் எங்களை கேலி செய்கிறார்கள் என்றார் விரக்தியாக.