நடுவானில் நொறுங்கி விழுந்த அஜர்பைஜான் விமானம்.. கஜகஸ்தானில் பரபரப்பு.. 42 பேர் பலி
அக்தாவ், கஜகஸ்தான்: அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான பயணிகள் விமானம் கஜகஸ்தான் நாட்டில் கீழே விழுந்து நொறுங்கியது. இதில் 42 பேர் பலியானதாக தகவல்கள் கூறுகின்றன. விமானத்தில் படுகாயமடைந்த நிலையில் பலர் மீட்கப்பட்டுள்ளனர்.
அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று 70 பயணிகள் மற்றும் ஊழியர்களுடன் பக்கு என்ற நகரிலிருந்து புறப்பட்டு ரஷ்யாவின் குரோஸ்னி நகரை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. கஜகஸ்தான் நாட்டில் உள்ள அக்தாவ் விமான நிலையத்துக்கு மேலே விமானம் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென நடு வானில் விமானத்தில் ஏதோ கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அக்தாவ் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்க வேண்டும் என்று விமானத்திலிருந்து கோரிக்கை வந்துள்ளது. அதைத் தொடர்ந்து அருகில் கடலோரமாக இருந்த இடத்தை நோக்கி விமானம் வேகமாக கீழ் நோக்கி வந்தது. கடலில் விமானத்தை இறக்க விமானி திட்ட்டமிட்டாரா என்று தெரியவில்லை. ஆனால் கடலுக்கு அருகில் உள்ள நிலப் பகுதியில் விமானம் மோதி விபத்துக்குள்ளாகி தீப்பிடித்துக் கொண்டது.
எம்பிரியார் இஎம்பி 190 ரக விமானமான இந்த விமானம் விபத்துக்குள்ளானதும், தீயணைப்புப் படையினர் மற்றும் மீட்புப் படையினர் விரைந்து சென்றனர். விமானம் இரண்டாக பிளந்து கிடந்த நிலையில் அதன் மீது தண்ணீர் பாய்ச்சி தீயை அணைக்க முயற்சிகள் நடந்தன. விபத்தில் இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. பலர் ஆபத்தான நிலையில் படுகாயத்துடன் மீட்கப்பட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்