இயற்கையின் வரப்பிரசாதம்.. வெள்ளத்திலிருந்து.. மக்களை காத்த ..அதிசய கிணறு!

Su.tha Arivalagan
Dec 18, 2023,06:54 PM IST

- மஞ்சுளா தேவி


நெல்லை: நெல்லையில் தொடர் மழை பெய்து வரும் நிலையில், பல ஆயிரம் கன அடி தண்ணீரை உள்வாங்கும் ஆயன் குளம் அதிசய கிணறு அனைவரையும் அதிசயிக்க வைத்துள்ளது.


நெல்லையில் உள்ள திசையன்விளை அருகே ஆயன்குளம் பகுதியிலல் அதிசய கிணறு உள்ளது. கடந்த மழை காலங்களில் 2000 கன அடி நீரை உள்வாங்கியது. ஆனாலும் இக் கிணறு நிரம்ப வில்லை.   தற்போது நெல்லை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை காரணமாக நெல்லை மாநகரமே ஸ்தம்பித்தது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.



பல்வேறு போக்குவரத்து சேவைகளும் துண்டிக்கப்பட்டுள்ளது.தொடர் மழை பெய்து வருவதால் இந்தப் பகுதியை சுற்றி  வரும் தண்ணீர் ஆயன்குளம் கிணற்றிற்கு செல்கிறது. ஏற்கனவே 2000 கன அடி நீரை உள்வாங்கிய நிலையில் தற்போது அதைவிட அதிக அளவு தண்ணீரை உள்வாங்கி வருகிறது. ஆனாலும் இந்த கிணறு நிரம்ப வில்லை.




ஏற்கனவே  சென்னை ஐஐடி பேராசிரியர் வெங்கட்ராமன் குழுவினர் நேரில் சென்று ஆய்வு  செய்தனர். இந்தக் கிணற்றுக்கு அடியில் சுண்ணாம்பு அமைக்கப்பட்ட நீர்வழிப் பாதை இயற்கையாகவே உருவாகியுள்ளது. இதனால் நீரை அதிகளவு சேமிக்க முடியும் என ஆய்வில் அறிக்கையாக மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனர். ஆனாலும் இதுவரை எந்த முயற்சியும் எடுக்கவில்லை.


இந்நிலையில் தற்போது இந்த கிணறு அதிக அளவு மழை நீரை உள்வாங்குவதாலும், இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்ததாகவும் மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இது கடவுள் கொடுத்த வரப்பிரசாதமாக இருப்பதால் அரசு இதில் கவனம் செலுத்தி இந்த  கிணற்றை பாதுகாக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.