பாபர் பிறந்த ஊர் டூ பாகிஸ்தான்.. இஸ்லாமிய நாடுகளில் இருந்து அயோத்தி ராமர் கோவிலுக்கு புனித நீர்!

Su.tha Arivalagan
Jan 04, 2024,07:21 PM IST
அயோத்தி : அயோத்தியில் புதிதாக, மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கருவறையில் அபிஷேகம் செய்வதற்காக இஸ்லாமிய நாடுகள் உள்ளிட்ட உலகின் 155 நாடுகளில் இருந்து புனிதநீர் எடுத்து, இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 

ராமர் கோவில் திறப்பு விழாவிற்காக பிற மதத்தினரும் தங்களின் பங்களிப்பை அளித்து வருவது அனைவரின் வரவேற்பையும் பெற்றுள்ளது.

கிட்டத்தட்ட 20 வருட சட்ட போராட்டத்திற்கு பிறகு உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள ஸ்ரீராம பிரான் அவதரித்த ராம் ஜென்ம பூமியில் ரூ.18,000 கோடி செலவில் மிக பிரம்மாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவில் சிலை பிரதிஷ்டை மற்றும் கோவில் திறப்பு விழா ஜனவரி 22ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட நாட்டின் மிக முக்கியமான பிரபலங்கள் பலர் கலந்து கொள்கிறார்கள். 



புதிய ராமர் கோவிலின் கருவறையில் பிரதிஷ்டை செய்வதற்காக கர்நாடக மாநிலம் மைசூருவை சேர்ந்த அருண் யோகிராஜ் என்ற பிரபல சிற்ப கலைஞர் வடித்த அழகிய ராமர் சிலை தேர்வு செய்யப்பட்டுள்ளது. குழந்தை முகமும், தெய்வீக தன்மையும் கொண்ட இந்த ராமர் சிலை ஜனவரி 17ம் தேதி ஊர்வலமாக அயோத்தி நகரம் முழுவதும் எடுத்துச் செல்லப்பட உள்ளது. பிறகு, கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டு, ஜனவரி 22ம் தேதி பகல் 12.20 மணியளவில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

சிலை பிரதிஷ்டை செய்வதற்கு மிகவும் ஏற்ற முகூர்த்த நேரமாக 84 விநாடிகள் கொண்ட நேரம் காசியின் தலை சிறந்த பண்டிதர்களால் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ராமர் கோவிலின் கருவறையை அபிஷேகம் செய்வதற்காக உலகில் உள்ள 155 நதிகளில் இருந்து புனிதநீர் கொண்டு வரப்பட்டுள்ளது. 

பாகிஸ்தான், உஸ்பகிஸ்தான், சீனா, தான்சானியா, நைஜீரியா, அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி,நேபாளம், பூடான், மாலத்தீவு, வங்கதேசம், பிரிட்டன், உக்ரைன், ரஷ்யா, சவுதி அரேபியா உள்ளிட்ட 155 க்கும் அதிகமான நாடுகளில் இந்த புனிதநீர் கொண்டு வரப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல ராம் ஜென்ம பூமி சர்ச்சை ஆக்கப்பட்டதற்கு காரணமாக சொல்லப்பட்ட முகலாய மன்னர் பாபர் பிறந்த மண்ணில் இருந்தும் புனிதநீர் அயோத்திக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 

இந்துக்கள் மட்டுமல்ல இஸ்லாமியர்கள், சீக்கியர்கள் என பிற மதங்களைச் சேர்ந்தவர்களும் இந்த புனித நீர் இந்தியா வருவதற்கு காரணமாக அமைந்துள்ளனர். இந்த புனித நீரை கொண்டு ஏப்ரல் 23ம் தேதி உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ராம்லல்லாவில் ஜலஅபிஷேகம் நடத்த உள்ளார். 

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பலரும் ஜல் கைலாஷிற்கு சென்று வழிபட்டு திரும்பியதும் அயோத்தி ராமர் கோவிலில் ஏப்ரல் 23ம் தேதி சித்ரா பெளர்ணமி நாளில் இந்த புனிதநீரை கொண்டு அபிஷேகம் செய்வார்கள் என சொல்லப்படுகிறது. 

யாரும் அவ்வளவு எளிதில் செல்ல முடியாத அன்டார்டிகா பகுதியில் இருந்தும் அயோத்தி ராமர் கோவிலுக்கு புனித நீர் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த புனித நீர் எந்த நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்டதோ அந்த நாட்டின் பெயர், கொடி, அந்த புனித நீர் எடுக்கப்பட்ட நதி ஆகியவற்றின் பெயர்களுடன் ஸ்டிக்கராக ஒட்டப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகிறது. பாகிஸ்தானின் சிந்து நதியில் இருந்து எடுக்கப்பட்ட புனிதநீர் துபாய் அனுப்பப்பட்டு, அங்கிருந்து இந்தியா கொண்டு வரப்பட்டுள்ளது.