என்னே ஒரு ஆச்சரியம்.. அயோத்தி பால ராமரை.. தரிசிக்க அனுமாரே.. நேரில் வந்துட்டாரா?

Manjula Devi
Jan 24, 2024,05:32 PM IST

அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நிறைவடைந்த நிலையில், தொடர்ந்து பொதுமக்கள்  கூட்டம் அலைமோதுகிறது. லட்சக்கணக்கில் மக்கள் குவிவதால் கூட்டத்தை சமாளிக்க முடியவில்லையாம்


கிட்டத்தட்ட திருப்பதி கோவில் போல நீண்ட நேரம் காத்திருந்துதான் சாமியைப் பார்க்க முடிகிறதாம். இதுவரை 5 லட்சத்திற்கும் மேற்பட்ட  மக்கள் காத்திருந்து பால ராமரை தரிசனம் செய்துள்ளனராம்.


இந்த நிலையில் நேற்று ராமர் கோயிலுக்குள் குரங்கு ஒன்று வந்து ராமரை தரிசனம் செய்துள்ளது. இதைப் பார்த்து மக்கள் ஆச்சரியமாகி விட்டனராம்.  ஆஹா.. அனுமாரே தனது தலைவனைத் தேடி வந்து விட்டாரா என்று மக்கள் வியப்பில் மூழ்கி விட்டனர். ராமருக்குப் பூஜை செய்வதற்காக ஆஞ்சநேயரே வந்து விட்டதாக  அங்குள்ள பாதுகாப்பு அதிகாரிகள் வியப்புடன் தெரிவித்தனர்.




அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக 2020 ஆம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதனைத் தொடர்ந்து கோவில் கட்டும் பணி மும்மரமாக நடந்து வந்தது. தற்போது மூன்று அடுக்குகளாக 161 அடி உயரத்தில் கோயில் கட்டப்பட்டுள்ளது. பெரும்பாலான பணிகள் நிறைவடைந்த நிலையில் 22 ஆம் தேதி பாலராமர் கண்களில் உள்ள மஞ்சள் துணி அகற்றப்பட்டு, பாலராமர் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி . அப்போது சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.


இதில் முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா நட்சத்திரங்கள், யோகிகள் என பல்வேறு துறையை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். கும்பாபிஷேகம் நடந்த அன்று பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. இதனை அடுத்து பொதுமக்கள் தரிசனத்திற்காக நேற்று  முதல் அனுமதி அளிக்கப்பட்டது. 


பக்தர்கள் தரிசனத்திற்காக தினமும் காலை 7 மணி முதல் 11:30 மணி வரையும், மதியம் 2 மணி முதல் இரவு 7 மணி வரையும்  அனுமதிக்கப்படுவர் என அறிவித்திருந்தனர். முதல் நாளான நேற்று அதாவது 23ஆம் தேதி  தரிசனத்திற்காக மக்கள் கூட்டம் அலைமோதியது. அதிகாலை 3 மணி முதல் மக்கள் தரிசனத்திற்காக நீண்ட வரிசையில் காத்திருந்து பால ராமரை தரிசனம் செய்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 5 லட்சம் பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.