கருவறையில் கண் திறந்த ராமர்.. இவரை பார்க்க யார் யார் எல்லாம் இன்று வந்தார்கள் தெரியுமா?
அயோத்தி: அயோத்தில் பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த விழாவிற்கு நாடு முழுவதிலும் இருந்து முக்கிய பிரமுகர்கள் வருகை தந்திருந்தனர். பிரதமர் நரேந்திர மோடி முதல் சாமானிய பிரஜை முதல் பலரும் இந்த விழாவுக்கு வந்திருந்தனர்.
4.25 அடி உயரம் கொண்ட இந்த பால ராமர் சிலையின் அகலம் 3 அடி, மொத்த எடை 1.5 டன். மூலவர் சிலை ராமரின் வயது 5. மூலவரின் தோற்றம் பரந்த நெற்றி, வசீகரமான கண்கள், நீண்ட கைகளைக் கொண்டிருக்கிறது. சிலை வடிவமைக்கப்பட்ட கல்லானது கர்நாடகத்தின் கருப்பு பாறைகளிலிருந்து செதுக்கப்பட்டது. ராமர் சிலையின் அடித்தளமானது தாமரையில் ராமர் நிற்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.
ராமர் சிலையைச் சுற்றியுள்ள பிரைபயில், தசாவதாரம், ஸ்வஸ்திக் சின்னத்துடன் ஓம், சுதர்சன சக்கரம், கதாயுதம், சூரியன், சந்திரன் ஆகியவை அமைந்துள்ளது. கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட குழந்தை ராமரின் சிலையின் பீடம் 3 அடி உயரத்தைக் கொண்டது. இச்சிலை மக்ரானா மார்பிள் கற்களால் செய்யப்பட்டு, அதன் மீது தங்கக் கவசம் பொருத்தப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாகவே நாடு முழுவதும் அயோத்தி ராமர் குறித்த பேச்சாகவே இருந்தது. அந்த கோவில் எங்குள்ளது, எவ்வளவு செலவு செய்து கட்டியுள்ளார்கள். என்ன என்ன சிறப்பு. எவையெல்லம் பிரம்மாண்டம் என்று அனைத்து தரப்பினரும் கோவில் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தனர். தற்பொழுது அந்த பரபரப்பு உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. நாட்டின் பிரதமர் மோடி 11நாள் விரதம் இருந்து பல புண்ணிய கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்து பின்னர் இன்று ராமர் கோவில் பிரதிஷ்டை நிகழ்ச்சியை மிகவும் பக்தியுடன் நடத்தி வைத்துள்ளார்.
அயோத்தி ராமர் கோவிலுக்கு பூஜை பொருள்கள் பட்டு வஸ்திரங்களுடன் வந்த பிரதமர் மோடி அங்கு சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டார். இந்த வழிபாட்டில் மோடிக்கு அருகே ஆர். எஸ். எஸ் தலைவர் மோகன் பாகவத், உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், அம்மாநில ஆளுநர் ஆனந்தி பென் படேல் உள்ளிட்டோர் அமர்ந்திருந்தனர். மேலும் இவர்களை தவிர நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். ஜனவரி 23ஆம் தேதிக்குப் பின்னர் அயோத்தியில் உள்ள ராமரை அனைவரும் தரிசிக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிகழ்வுக்காக அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. நாட்டின் பல்வேறு மூலைகளில் இருந்தும் பல்வேறு துறை பிரபலங்கள் அயோத்தி ராமர் கோவில் வந்தனர். இந் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் மிகப் பிரம்மாண்டமாக செய்யப்பட்டிருந்தது. முக்கிய பிரபலங்களின் வருகையையொட்டி பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டிருந்தது.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
இந்த விழாவை முன்னிட்டு முக்கிய பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதால், முக்கிய பிரபலங்கள் அதிகளவில் வருவார்கள் என்பதற்காக அயோத்தி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மத்திய ராணுவ படையும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது.10,000த்திற்கும் மேற்பட்ட சிசிடிவி கேமிராக்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்துடன் கூடிய ட்ரோன்கள் பாதுகாப்பிற்காக ஈடுபடுத்தப்பட்டிருந்தன.
நடிகர் நடிகையர்
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் தன் மனைவி லதா உடன் கலந்து கொண்டார். ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டு அவர் அயோத்தி வந்தடைந்தார். அதே போன்று நடிகர் தனுஷும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றார். தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, ராம்சரண், பாலிவுட் நடிகர்கள் அமிர்தாப்பச்சன், அபிஷேக் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், கங்கனா ரனாவத், விக்கி கெளஷல், கத்ரீனா கைஃப், அனுபவம் கேர், அக்சய் குமார், விவேக் ஒபராய், சங்கர் மகா தேவன், அனு மாலிக், பவன் கல்யாண்,அனுஷ்கா சர்மா, அல்லு அர்ஜூன், மாதுரி தீட்சித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொழில் அதிபர்கள்
அனில் அம்பானி, முகேஷ் அம்பானி மற்றும் அவருடைய குடும்பத்தினர். ஆனந்த மகேந்திரா, ரத்தன் டாடா, கவுதம் அதானி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கிரிக்கெட் வீரர்கள்
கிரிக்கெட் ஜாம்பவான்கள் விராட் கோலி, ரோகித் சர்மா, சச்சின் டெண்டுல்கர், சேவாக், ஜடேஜா, ராகுல் டிராவிட், சவுரவ் கங்குலி, சானியா நெய்வால், பி.வி.சிந்து, அனில் கும்ப்ளே, ரவிச்சந்திரன் அஸ்வின்,ஹர்மன்ப்ரீத் கவுர், மிதாலி ராஜ், வெங்கடேஷ் பிரசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கைத்தாங்கலாக வந்த தேவெகவுடா
யோகா குரு பாபா ராம்தேவ் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். மதச்சார்பற்ற ஜனதா தள தலைவரும் முன்னாள் பிரதமருமான ஹெச்.டி. தேவகவுடாவும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார். அவரைக் கைத்தாங்கலாக அழைத்து வந்தனர்.
அரசியல் தலைவர்கள், முன்னணி தொழிலதிபர்கள், மடாதிபதிகள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு நட்சத்திரங்கள் என சுமார் 8 ஆயிரத்திற்கும் அதிகமான பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.