தீபாவளிக்கு 2 நாள்தான்.. எப்படி பாதுகாப்பா பட்டாசு வெடிக்கணும்?.. டெமோ காட்டிய தீயணைப்பு வீரர்கள்

Manjula Devi
Oct 29, 2024,04:32 PM IST

சிவகங்கை: தீபாவளி பண்டிகை வருவதற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாடுவது எப்படி என தீயணைப்பு மீட்பு பணிகள் நிலைய அதிகாரி பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கினார்.


தீபாவளி என்றாலே நம் நினைவுக்கு வருவது பட்டாசும் புத்தாடைகளும் தான். இதனால் மக்கள்  பட்டாசுகளையும் புதுத் துணிகளையும் வாங்கி தீபாவளி பண்டிகையை  கொண்டாட தயாராகி விட்டனர். இந்த இரண்டிலும் எது இல்லை என்றாலும் தீபாவளியே கலை கட்டாது. அதிலும் குழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பும் பட்டாசு இல்லை என்றால் சொல்லவா வேண்டும். எப்போதும் வருகின்ற நாட்கள் போல தான் இருக்கும். டமால் டுமீல் என கேட்கும் அந்த வெடி சத்தம் தான் தீபாவளி அன்று நம்மை மேலும் குதூகலப்படுத்தும். அதிலும் இந்த வருடம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுவரவாக பல்வேறு வடிவத்தில் பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளன. இதனை மக்கள் ஆர்வமாக வாங்கிச் செல்கின்றனர். இதனால் பட்டாசு விற்பனை சூடு பிடித்துள்ளது.




இந்த நிலையில் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில்,  பட்டாசுகளை எப்படி வெடிக்க வேண்டும்.. தீ விபத்து ஏற்பட்டால் எப்படி தீயை அணைக்க வேண்டும்.. என்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தீயணைப்பு மீட்புப் பணிகள் நிலைய அலுவலர் கணேசன் மாணவர்களுக்கு நேரடி செயல்முறை விளக்கத்துடன் பயிற்சி அளித்தார். இந்த நிகழ்ச்சியை பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார்.


அப்போது தீயணைப்பு நிலைய அதிகாரி பட்டாசுகளை எப்படி வெடிக்க வேண்டும் என்பதை விளக்கி கூறியதாவது,


குழந்தைகள் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகளை பெரியவர்களின் மேற்பார்வையில் வெடிக்க வேண்டும். தவறுதலாக நம்மீது வெடி விழுந்துவிட்டால் ஸ்டாப்,ட்ராப் ,ரோல் என்கிற முறையை பின்பற்றுங்கள்.




புஸ்வாணம், சங்கு சக்கரம், வெடிகள்  வைக்கும்போது பெரிய ஊதுபத்தியை பயன்படுத்துங்கள். சுமார் இரண்டு அடி தள்ளி நின்றுவெடியை வையுங்கள்.


வெடி , வெடிக்கும்போது எப்போதுமே அருகில் தண்ணீர் வைத்து கொள்ளுங்கள். வெடிகளை பாட்டில், கொட்டாங்குச்சி போன்றவற்றில் வைத்து வெடிக்க கூடாது. வெடிகளை கைகளில் பிடித்து வெடிக்க கூடாது.


வெடிக்காமல் இருக்கும் வெடிகளை ஒன்று சேர்த்து தீ வைக்க கூடாது.அவ்வாறு செய்தால் நமது முகத்தில் வெடி வந்து விழுந்து பாதிப்பு ஏற்படும்.

     

வெடிக்கும்போது நைலான் ,பாலியஸ்டர் துணிகளை போட்டு கொண்டு வெடிக்க வேண்டாம். பருத்தி துணிகளை அணிந்து மட்டுமே வெடியுங்கள்.அதுவே பாதுகாப்பானது.




வெடிகளை சட்டை, பேண்ட் பைகளில் வைத்து  கொள்ள வேண்டாம். நாம் வெடிக்கும்போது கவன குறைவாக இருந்தால் நமது மேல் வெடி தீ விழுந்தால் பைகளில் உள்ள வெடிகளும் வெடித்து உயிருக்கு ஆபத்தாகும். எனவே பாதுகாப்பாக தீபாவளியை கொண்டாடுங்கள் என கூறினார்.


முடிவில் தேவகோட்டை தீயணைப்பு மீட்புப் பணிகள் நிலையத்தை சேர்ந்த முன்னணி தீயணைப் போர் முனீஸ் குமார்,வீரப்பெருமாள், சொக்கலிங்கம், ஜோசப் பாலாஜி,ஆகியோர் பாதுகாப்பான தீபாவளி குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரச்சாரங்களையும் வழங்கினார்கள். மேலும் நிகழ்ச்சி நிறைவாக ஆசிரியர் முத்துலட்சுமி அனைவருக்கும் நன்றி கூறினார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்