அஜீத் ஓட்டிய அந்த பைக்.. மியூசியத்தில் சேர்த்து சர்ப்பிரைஸ் கொடுத்த ஏவிஎம்!
சென்னை: திருப்பதி படத்தில் அஜீத் ஓட்டிய பைக்கை தனது ஹெரிடேஜ் மியூசியத்தில் சேர்த்துள்ளது ஏவிஎம் நிறுவனம்.
ஏவிஎம் நிறுவனம் புதிதாக ஹெரிடேஜ் மியூசியத்தை திறந்துள்ளது. இதில் ஏவிஎம் தயாரித்த கருப்பு வெள்ளைக் காலத்துப் படங்கள் முதல் லேட்டஸ்ட் படம் வரை அதில் பயன்படுத்தப்பட்ட விதம் விதமான பொருட்களை காட்சிக்கு வைத்துள்ளனர்.
விதம் விதமான கேமராக்கள், கார்கள், பைக்குகள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்கள் இதில் இடம் பெற்றுள்ளன. சிவாஜி கணேசன் பராசக்தி படத்தில் முதன் முதலில் நின்று வசனம் பேசிய இடமும் கூட இந்த மியூசியத்துக்குள்தான் வருகிறது.
இந்த மியூசியத்தில் இடம் பெற்றுள்ள பொருட்கள் மிக மிக சுவாரஸ்யமானவை. அந்த வகையில் லேட்டஸ்டாக அஜீத்குமார் நடித்த திருப்பதி படத்தில் அவர் ஓட்டிய பல்சார் பைக்கையும் இப்போது மியூசியத்தில் இணைத்துள்ளனராம்.
இதுகுறித்து ஏவிஎம் நிறுவனம் வெளியிட்டுள்ள டிவீட்டில், அனைவருக்கும் அஜீத் குமார் சார் சிறந்த பைக் பிரியர் என்பது தெரியும். அவரது ரசிகர்களுக்கு இந்த ட்ரீட்டை சமர்ப்பிக்கிறோம். திருப்பதி படத்தில் அஜீத் குமார் சார் பயன்படுத்திய பஜாஜ் பல்சர் 189சிசி 2004 பைக்கை தற்போது ஹெரிடேஜ் மியூசியத்தில் இணைத்துள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்பே வா படத்தில் சரோஜாதேவி பயன்படுத்திய நீளமான கார், எஜமான் படத்தில் ரஜினிகாந்த் பாடல் காட்சியில் இடம் பெற்ற சாரட் வண்டி, சகலகலாவல்லவன் படத்தில் கமல்ஹாசன் ஓட்டிய, ஏவி மெய்யப்பனின் சொந்தக் கார், சிவாஜி படத்தில் இடம் பெற்ற ரஜினிகாந்த்தின் சிவாஜி கெட்டப் சிலை என விதம் விதமான பொருட்கள் இந்த கண்காட்சியத்தில் இடம் பெற்றுள்ளன.