அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... டோக்கன் பதிவிறக்கம் தொடங்கியது.. காளைகள் ரெடி.. ஆரம்பிக்கலாங்களா!

Meenakshi
Jan 13, 2025,05:46 PM IST

மதுரை:   பொங்கல் தினமான நாளை நடைபெற உள்ள அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஆன்லைன் டோக்கன் பதிவிறக்கம் தொடங்கியுள்ளது.


ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை ஒட்டி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டிற்கான ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான முன் ஏற்பாடுகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜனவரி 14ம் தேதி அவனியாபுரத்திலும், 15ம் தேதி பாலமேட்டிலும், 16ம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த போட்டிகளில் பங்கேற்பவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.




நாளை நடைபெற உள்ள அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்பவர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு ஜனவரி 7ம் தேதி தொடங்கியது. இதில் ஏராளமான இளைஞர்கள்  மற்றும் காளைகளின் உரிமையாளர்கள் ஆர்வமுடன் பதிவு செய்து வந்தனர்.  இந்த நிலையில் நாளை நடைபெற உள்ள அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்காக, 2,035 காளைகளும், 1,735 மாடுபிடி வீரர்களும் பங்கேற்க ஆன்லைனில் பதிவு செய்திருந்தனர். இதில், 1,100காளைகளும் 900 மாடுபிடி வீரர்களும் தேர்வு செய்யப்பட்டு இறுதி பட்டியலை மதுரை மாவட்ட நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ளது. இந்த போட்டிகளுக்கான டோக்கன்களுக்கான பதிவிறக்கம் தற்போது தொடங்கியுள்ளது.


அவனியாபுரத்தில் நாளை நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு எராளமான பொதுமக்கள், மாடுபிடி வீரர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு காளைகளுடன் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் எற்படாத வகையில் மதுரை மாநகர காவல்துறை சார்பில் அப்பகுதியில்  போக்குவரத்து மாற்றம் செய்யபட்டுள்ளது. அத்துடன் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளும் அவனியாபுரத்தில் செய்யப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்