அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிறைவு.. 19 காளைகளை அடக்கிய திருப்பரங்குன்றம் கார்த்திக்.. கார் பரிசு!
மதுரை: மதுரை அவனியாபுரத்தில் விறுவிறுப்பான ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. திருப்பரங்குன்றம் கார்த்திக் 19 காளைகளை அடக்கி முதல் பரிசை வென்றார்.
இன்று தைத்திங்கள் முதல் நாள். தைப் பொங்கல் திருநாள். தமிழர்களின் வீடுகள் தோறும் பொங்கல் விழா களை கட்டியுள்ளது. இந்த நிலையில் பொங்கல் தினத்தையொட்டி மதுரையில் ஜல்லிக்கட்டுத் திருவிழாவும் களை கட்டியுள்ளது. மதுரை மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று காலை கோலாகலமாக தொடங்கியது.
கிட்டத்தட்ட 1110 காளைகளும், 1000 பேர் வரையிலான காளையர்களும் இதில் கலந்து கொண்டனர். ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் இறுதிச் சுற்றுக்கான வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு வந்தனர். வாடிவாசலிலிருந்து சீறி வந்த காளைகளை வீரர்கள் பாய்ந்துப் பிடித்து அடக்கி பரிசுகளை அள்ளிச் சென்றனர். பல காளைகள், பிடிபடாமல் நழுவிப் போய் அவையும் பரிசுகளை வென்றன.
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. அமைச்சர் மூர்த்தி, மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா உள்ளிட்டோர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நேரில் பார்த்தனர்.
திருப்பரங்குன்றம் கார்த்திக்கு கார் பரிசு
இன்றைய ஜல்லிக்கட்டு போட்டியில் திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவர்19 காளைகளை அடக்கி முதலிடத்தைப் பிடித்தார். அவருக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக அளிக்கப்பட்டது. அரவிந்த் திவாகர் 15 காளைகளை அடக்கி 2வது இடத்தையும், திருப்புவனம் முரளிதரன் 13 காளைகளை அடக்கி 3வது இடத்தையும் பிடித்தனர்.
சிறந்த காளையின் உரிமையாளருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் டிராக்டர் பரிசாக அளிக்கப்பட்டது. ஒருவர் மட்டும் இந்த ஜல்லிக்கட்டின்போது உயிரிழந்தார். மற்றபடி பெரிய அளவில் எந்த பிரச்சினையும் இல்லாமல் அமைதியான முறையில் ஜல்லிக்கட்டு சிறப்பாக நடந்து முடிந்தது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்