விரக்திக்குப் போன ரசிகர்கள்.. சமூக வலைதளங்களில் வருத்தம்.. சோகத்தில் மூழ்கிய இந்தியா!

Su.tha Arivalagan
Nov 19, 2023,09:52 PM IST

சென்னை: ஆஸ்திரேலியாவின் பேட்டிங் வரிசையை முடக்க முடியாமல் இந்தியா திணறி வருவதைப் பார்த்து ரசிகர்கள் பெரும் சோகமடைந்துள்ளனர் . கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய் விடுமா என்ற வருத்தமும், ஏமாற்றமும் ரசிகர்களை வெறுப்படைய வைத்துள்ளது.


நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் ஒரு தோல்வியும் காணாமல் ஒய்யாரமாக கெத்தாக வலம் வந்த அணி இந்தியா மட்டுமே. எந்தப் போட்டியிலும் அது தடுமாறவில்லை. இத்தனைக்கும், இதே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் கில்லி மாதிரி ஜெயித்தது இந்தியா.




ஆனால் இன்று இறுதிப் போட்டியில் கடுமையாக திணறி விட்டது இந்தியா. முதலில் பேட்டிங்கில் சொதப்பியது. முக்கிய வீரர்கள் பெரிய ஸ்கோரை எட்ட முடியவில்லை. ரோஹித் சர்மா, விராட் கோலி, கே.எல். ராகுல் மட்டுமே நல்ல ஸ்கோரை எடுத்தனர். ஆனால் மற்றவர்களால் பெரிதாக அடித்து ஆட முடியவில்லை. இதனால் பெரிய ஸ்கோரை இந்தியாவால் எட்ட முடியாமல் போனது. 240 ரன்களுடன் இந்தியாவின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.


ஆனால் இப்போது பவுலர்கள் தடுமாறிக் கொண்டுள்ளனர். கடுமையாக போராடித்தான் பார்க்கின்றனர். ஆனால் 3 விக்கெட்களுக்கு மேல் ஒன்றும் நகரவில்லை. இந்திய பவுலர்களுக்கு பவுலிங் பிராக்டிஸ் போல மாறி விட்டது போட்டி.  எப்படிப் போட்டாலும் விக்கெட் விழவில்லை. மிக மிக சாதுரியமாக ஆடி வருகிறது ஆஸ்திரேலியா.




டிரவிஸ் ஹெட் நிலைத்து நின்று விட்டார். அத்தோடு இல்லாமல் சதமும் அடித்து முடித்து விட்டார்.. மிகப் பெரிய சோகத்தில் மூழ்கியுள்ளனர் இந்திய ரசிகர்கள்.. வெற்றி இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா வேகமாக நகர்வதால் இந்தியர்கள் மொத்தப் பேரும் பெரும் ஏமாற்றத்திலும் சோகத்திலும் மூழ்கியுள்ளனர்.