Independence... அன்புள்ள பாரதி.. நீ நல்லாருக்கியா.. உனக்கு ஒரு கடிதம்..!
Aug 11, 2023,01:04 PM IST
- மீனா
அன்புள்ள பாரதிக்கு
சுதந்திரக் காற்றுக்காக ஏங்கி ஏங்கி அதைப் பார்க்காமலேயே, அதை சுவாசிக்காமலேயே கிளம்பிப் போய் விட்டாயே.. சொர்க்கத்திலாவது நீ நல்லாருக்கியா..?
நாங்கள் இங்கு நலமாக இருக்கிறோம். நீ நிறைய கனவு கண்டவன் பாரதி.. நாட்டுக்காக மட்டுமல்லாமல், எங்களைப் போன்ற பெண்களுக்காகவும் சேர்த்துப் போராடிய புரட்சி மனிதன் நீ. நாட்டுக்குள் கஷ்டப்பட்டு வந்த மக்களுக்காகவும், வீட்டுக்குள் போராடிக் கொண்டிருந்த பெண்களை வெளியில் கொண்டு வருவதற்கும் நீ பட்ட பாடுகள் இன்னமும் நினைக்க நினைக்க கண்ணீரை வரவைக்கின்றன.
நீ போய் விட்டாய்.. ஆனால் இன்னும் நாங்கள் உனது கவிதைகளின் மணத்தை நுகர்ந்து கொண்டுதான் உள்ளோம். உன்னுடைய கனவுகளும் கூட இன்று நிறைவேறி வருகின்றன. குறிப்பாக எங்களின் நிலை.. அதாவது பெண்களின் நிலை நல்லாவே மாறிருச்சு.
வீட்டை விட்டே வெளியே வராத நாங்கள் இன்று வான்வெளியில் விமானம் ஓட்டுகிறோம். பூமியை விட்டு வேற்று கிரகத்திற்கே செல்லும் நிலையை எட்டி விட்டோம். உனக்கு தெரியுமா? ஆண்கள் உடலளவில் பலசாலிகளாக இருந்தாலும் நாங்களும் மனதளவில் பலசாலிகள் என்று நிரூபித்துக் கொண்டே தான் இருக்கிறோம். அந்தத் தைரியம் கிடைத்து விட்டது.
படிப்பதிலும் பெண்கள் மிகவும் திறமைசாலிகளாகவும் இருக்கிறோம். அவர்கள் செய்யும் எந்த வேலையையும் நாங்கள் விட்டு வைப்பது இல்லை. நீ எங்களுக்காக போராடிய போராட்டத்திற்கு வெற்றியாக தான் இதை பார்க்கிறோம். நீயும் இதை அறிந்து அதிகமாக சந்தோஷப்படுவாய் என்று எங்களுக்கு தெரியும். ஆனாலும் பாரதி கண்ட புதுமை பெண்கள் நாங்கள் என்று கூறி சில பெண்கள் செய்யும் காரியங்கள்தான் கஷ்டமாக இருக்கிறது பாரதி
தன்னுடைய, சுயநலத்திற்காக தான் பெற்ற குழந்தைக்கு விஷம் வைத்துக் கொன்ற தாய் .. போதும், ஆடை குறைப்பே சுதந்திரம்.. பெண்ணுக்கு பெண்ணே இங்கு எதிரியாக மாறும்போதும்.. கட்டிய கணவனுக்கு நம்பிக்கை துரோகம் செய்யும்போதும்.. அதற்கும் ஒரு படி மேல் போய் கணவனையே கொலை செய்யும்போதும்.. குடும்ப வாழ்க்கையில் சகிப்புத்தன்மையை மறந்து, பிரச்சனைகளுக்கு எல்லாம் விவாகரத்து கேட்டு நீதிமன்றம் வாசல்படி ஏறும் போதும்.. இப்படி நிறைய நிறைய!
ஒவ்வொன்றும் தனி மனித உரிமைதான்.. இல்லை என்று நிச்சயம் யாரும் சொல்ல முடியாதுதான். ஆனால் இவர்களில் பலரும் சொல்லும் வார்த்தை "பாரதி கண்ட புதுமைப் பெண்கள் நாங்கள்" என்பதுதான்.. அதுதான் கொஞ்சம் இடிக்கிறது. நீ இதற்காகவா கனவு கண்டாய் பாரதி?
நீ சொன்ன பல நல்ல விஷயங்களை பல பெண்களும் கருத்தாக கடைப்பிடிக்கிறார்கள், ஏற்றுக் கொள்கிறார்கள்.. அதை நான் சொல்லியே ஆக வேண்டும்.
பெண்கள் என்றால் ஆண்களுக்கு அடங்கித்தான் போக வேண்டும் என்ற மனப்பான்மையை மாற்றி நாங்களே சுயமாக சிந்திக்கவும் பழகிக்கொண்டோம். ஆங்கிலேயர்களிடமிருந்து இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்க
அகிம்சையை ஆயுதமாக பயன்படுத்தி காந்தியடிகள் சுதந்திரத்தை வாங்கி கொடுத்தார். அதேபோல் ஆண்களிடமிருந்து எங்களுக்கும் சுதந்திரம் கிடைக்க படிப்பை ஆயுதமாக பயன்படுத்திக் கொண்டு வருகிறோம்.
"ஆயுதம் செய்வோம்" நீ ஒரு பாட்டில் சொல்லிருப்பே.. அந்த ஆயுதம் எங்களைப் பொறுத்தவரை "படிப்பு"தான்.
படிப்பு என்ற ஆயுதத்தினால் இந்தியாவையும் தாண்டி வெளிநாடுகளிலும் இப்பொழுது எங்களால் வேலைக்கு செல்ல முடிகிறது. எங்கும் வெற்றிக்கொடி நாட்ட முடிகிறது. அதிலும் பல பெண்கள் அவர்களாகவே சொந்தத் தொழில் செய்து, சொந்தக்காலில் நின்று தொழிலதிபர்களாகவும், பல தொழில் முனைவோர்களை உருவாக்குபவர்களாகவும் இருக்கிறார்கள். வெளிநாடுகளுக்கும் வியாபாரத்தை விரிவாக்கும் வித்தகர்களாகவும் இருக்கிறோம்.
இது மட்டுமா எங்களுடைய அறிவு, ஆற்றல், சிந்தனை, தைரியம் எல்லாமே நீ எதிர்பார்த்ததை விட எல்லையற்று உயர்ந்து விட்டது. இப்பெல்லாம் உன்னைப் போலவே நாங்களும் புரட்சிகரமாக கவிதைகள் எல்லாம் எழுதுகிறோம் பாரதி.. தெரியுமா உனக்கு? வீட்டின் படிகளை தாண்ட முடியாமல் தடுக்கப்பட்ட நாங்கள், இன்று பல மேடைகள் ஏறி செம்மார்ந்த சிறப்புடன் திகழ்கிறோம். நீ ஜெயிச்சுட்ட பாரதி!
இப்படிக்கு
நீ கனவு கண்ட புதுமைப்பெண்