கெஜ்ரிவால் விலகலைத் தொடர்ந்து.. டெல்லி புதிய முதல்வராக.. இன்று பதவி ஏற்கிறார்.. அதிஷி!

Manjula Devi
Sep 21, 2024,10:42 AM IST

டெல்லி:   டெல்லியில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த அரவிந்த் கெஜ்ரிவாலை தொடர்ந்து புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்ட அதிஷி இன்று பதவியேற்க உள்ளார்.அவருக்கு துணை ஆளுநர் வி கே சக்சேனா பதவிப்பிரமாணம் செய்து வைக்க இருக்கிறார்.


மதுபான கொள்கை வழக்கில் சட்ட விரோதமாக பண மோசடி செய்ததாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக துறையினர் கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர். இதனைத் தொடர்ந்து சிபிஐயும் வழக்கு தொடர்ந்தது.  அமலாக்க துறையினர் தொடர்ந்த வழக்கில் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கொடுக்கப்பட்ட நிலையில் கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி சிபிஐ தொடர்ந்த வழக்கிலும் ஜாமின் கிடைத்தது. ஆனால் முதல்வர் அலுவலகம் செல்லக்கூடாது. கோப்புகளில் கையெழுத்திடக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.




இதையடுத்து சிறையில் இருந்து வெளிவந்த அரவிந்த் கெஜ்ரிவால் தான் நேர்மையாளன் என மக்கள் சொல்லும் வரை முதல்வர் பதவியில் அமர மாட்டேன். இதற்காக முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்திருந்தார். அதன்படி தனது பதவியையும் அவர் ராஜிநாமா செய்தார். இதனைத் தொடர்ந்து டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது அனைத்து எம்எல்ஏக்களும் ஒரு மனதாக மூத்த அமைச்சர் அதிஷியை புதிய முதல்வராக தேர்வு செய்தனர்.


இதன் பின்னர் டெல்லி துணைநிலை ஆளுநரை சந்தித்து முதல்வர் கெஜ்ரிவால் ராஜினமா கடிதத்தை வழங்கினார். அதேபோல் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதத்தை அதிஷியும் ஆளுநரிடம் வழங்கினார்.  அரவிந்த் கெஜ்ரிவாலின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்ட, துணை நிலை ஆளுநர் வி கே சக்சேனா இன்று டெல்லியின் புதிக முதல்வராக அதிஷிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க இருக்கிறார். இந்த நிகழ்ச்சி டெல்லி ஆளுநர் மாளிகையில் நடைபெற உள்ளது. 


அதிஷியுடன் 5 அமைச்சர்கள் கொண்ட அமைச்சரவையும் பதவியேற்கவுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்