க்ரைம் திரில்லராக உருவாகியுள்ள.. நடிகர் ஷாமின் அஸ்திரம் திரைப்படம்.. பிப்ரவரி 21-ல் வெளியீடு!
சென்னை: க்ரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள அஸ்திரம் திரைப்படத்தை வெளியிடும் உரிமையை பைவ் ஸ்டார் நிறுவனம் பெற்றுள்ளது. இப்படம் பிப்ரவரி 21 இல் வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கியவர் தான் நடிகர் ஷாம். இவர் ஹீரோவாக நடிக்கும் காலகட்டத்தில் பெண்களின் கனவு கண்ணனாகவும் திகழ்ந்தவர். தமிழ் திரைப்படங்கள் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு, மலையாளம் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 2000 ஆம் ஆண்டில் வெளியான குஷி திரைப்படத்தில் விஜயின் நண்பராக கௌரவ தோற்றத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானவர் நடிகர் ஷாம்.
பிறகு 12பி என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அவதரித்தார். பின்னர் உள்ளம் கேட்குமே, லேசா லேசா, திரைப்படம் மூலம் பிரபலமானார். தொடர்ந்து ஏ பி சி டி, ஏன் நீ ரொம்ப அழகா இருக்க, பாலா, இயற்கை, உள்ளிட்ட பல்வேறு வெற்றிப் படங்களின் நடித்துள்ளார். தொடர்ந்து தமிழ் திரையுலகில் பட வாய்ப்புகள் குறைந்ததால் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அதன்படி ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தில்லாலங்கடி படத்தில் போலீஸ் வேடத்திலும், விஜயின் வாரிசு படத்தில் அண்ணன் வேடத்திலும் நடித்து வரவேற்பை பெற்றார்.
இந்த நிலையில் தற்போது நடிகர் ஷாம் அஸ்திரம் என்ற படத்தில் மீண்டும் நாயகனாக நடித்துள்ளார். நாயகியாக மாடலிங் துறையை சேர்ந்த ரஞ்சனி நடித்துள்ளார். இவர்களுடன் நிழல்கள் ரவி, ஜீவா ரவி, அருள் டி .சங்கர், மற்றும் அறிமுக நடிகர் ரஞ்சித் டிஎஸ்எம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை அறிமுக இயக்குனர் அரவிந்த் ராஜ்கோபால் இயக்கியுள்ளார். சுந்தரமூர்த்தி இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
கிரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தை பெஸ்ட் மூவிஸ் சார்பில் தன சண்முகம்மணி தயாரித்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் படத்தின் ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது. இப்படத்தை தமிழக முழுவதும் வெளியிடும் உரிமையை பைவ் ஸ்டார் செந்தில் பெற்றுள்ளார். இந்நிறுவனம் ஏற்கனவே பார்க்கிங், மகாராஜா, கருடன், உள்ளிட்ட மிகப்பெரிய வெற்றி திரைப்படங்களை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் அஸ்திரம் படமும் ரசிகர்களின் வரவேற்பு பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விறுவிறுப்பான துப்பறியும் திரில்லர் படமாக உருவாகியுள்ள அஸ்திரம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இந்த நிலையில் புத்தாண்டை முன்னிட்டு படம் பிப்ரவரி 21ஆம் தேதி உலகமெங்கும் பிரம்மாண்டமாக வெளியிட இருப்பதாக பைவ் ஸ்டார் நிறுவனம் அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்