22 முதல் 30 வயதுக்குள் பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும்.. அஸ்ஸாம் முதல்வர் சொல்கிறார்!
Jan 28, 2023,02:43 PM IST
குவஹாத்தி: பெண்கள், 22 முதல் 30 வயதுக்குள் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறியுள்ளார்.
குவஹாத்தியில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பேசுகையில் பெண்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கிப் பேசினார் சர்மா. அவரது பேச்சிலிருந்து சில:
பெண்கள் பொருத்தமான வயதில் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும். அதைத் தள்ளிப் போடக் கூடாது. இதன் மூலம் மருத்துவ சிக்கல்களைத் தவிர்க்க முடியும். சிறார் திருமணங்களையும், மிகவும் இளம் வயது தாய்மையையும் தடுக்க எனது அரசு உறுதியுடன் உள்ளது.
போக்சோ சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த அஸ்ஸாம் அரசு முடிவு செய்துள்ளது. அடுத்த 6 மாதத்தில், 14 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளுடன் உறவு வைத்துக் கொள்ளும் ஆண்கள் சிறைக்கு போகப் போகிறார்கள். 14 வயதுக்குட்பட்டோரை திருமணம் செய்து கொள்வதும் குற்றமாகும். 18 வயதுதான் ஒரு பெண்ணுக்குத் திருமண வயது. அதற்கு கீழே உள்ள பெண்ணைக் கல்யாணம் செய்தால் சிறைக்குத்தான் போக வேண்டும்.
பெண்கள் தாய்மை அடைவதற்கு நீண்ட காலம் காத்திருக்கக் கூடாது. மருத்துவ சிக்கல்கள் ஏற்படும். 22 முதல் 30 வயதுக்குள் குழந்தை பெற்றுக் கொள்வதே சிறந்தது என்றார் அவர்.