ஆசிய ஹாக்கி போட்டி : மலேசியாவை இன்று பைனலில் சந்திக்கிறது இந்தியா!
Aug 12, 2023,09:39 AM IST
சென்னை : பாகிஸ்தானை தொடர்ந்து ஜப்பானையும் அபாரமாக வீழ்த்தி ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் பைனலுக்கு முன்னேறி உள்ளது இந்திய அணி. இதற்காக இந்திய அணிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
6 நாடுகள் மோதும் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டி தொடர் ஆகஸ்ட் 3 ம் தேதி துவங்கி நடந்த வருகிறது. பல ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் இந்த போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த போட்டித் தொடரின் இறுதிப் போட்டிகள் ஆகஸ்ட் 12 ம் தேதியான இன்று சென்னையில் நடைபெறுகிறது.
இதில் இந்தியா விளையாடிய 5 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டியை டிரா செய்துள்ளது. அணிகளின் தர வரிசை பட்டியலில் இந்திய அணி 13 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தது. இந்நிலையில் லீக் சுற்று போட்டிகளின் கடைசி போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய அணி.
இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 11 ம் தேதியான நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் ஜப்பான் அணியை எதிர்கொண்ட இந்திய அணி, 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் அதிக புள்ளிகளுடன் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ள இந்திய அணி பைனலுக்குள் நுழைந்துள்ளது. நேற்று நடைபெற்ற மற்றொரு அரையிறுதிப் போட்டியில் மலேசியா மற்றும் தென்கொரிய அணிகள் மோதின. இதில் மலேசிய அணி 6-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, பைனலுக்கு சென்றுள்ளது.