Asian Games 2023: 5 பதக்கங்களை அள்ளியது இந்தியா.. கிரிக்கெட்டிலும் ஒரு பதக்கம் கன்பர்ம்ட்!
ஹாங்ஷோ (சீனா): சீனாவின் ஹாங்ஷோ நகரில் தொடங்கியுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் முதல் நாளில் இந்தியாவுக்கு 5 பதக்கங்கள் கிடைத்துள்ளன. மகளிர் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளதால் அதிலும் ஒரு பதக்கம் உறுதியாகி விட்டது.
மிகப் பிரமாண்டமான முறையில் ஹாங்ஷோ நகரில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியுள்ளன. தொடக்க விழாவிலேயே சீனா அசத்தி விட்டது. செயற்கை நுன்னணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கண்ணுக்கு விருந்தளித்தது தொடக்க விழா.
ஆசிய விளையாட்டுப் போட்டியின் முதல் நாளிலேயே இந்தியா தனது பதக்க வேட்டையைத் தொடங்கியது. இதுவரை 5 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.
இந்தியாவின் முதல் பதக்கத்தை மகளிர் துப்பாக்கிச் சுடும் பிரிவில் வீராங்கனைகள் ரமீதா, மெஹலி கோஷ், ஆஷி செளக்ஸி ஆகியோர் அடங்கிய குழு பெற்றுத் தந்தது. மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இக்குழுவினர் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினர்.
2வது பதக்கம் ஆடவர் டபுள்ஸ்கல் லைட்வெயிட் பிரிவில் அர்ஜூன் லால் ஜாட் - அரவிந்த் ஜோடி பெற்றது. இதுவும் வெள்ளிப் பதக்கமாகும். 3வது பதக்கமாக ஆடவர் துடுப்புப் படகுப் பிரிவில் பாபு லால் யாதவ் - லேக் ராம் வெண்கலம் வென்றனர்.
இதேபோல ஆடவருக்கான எட்டு பேர் கொண்ட துடுப்புப் படகுப் போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. அதேபோல மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் தனி நபர் பிரிவில் இந்தியாவின் ரமீதா வெண்கலப் பதக்கம் வென்றார். இதைத் தொடர்ந்து இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது.
மகளிர் டி20 கிரிக்கெட் போட்டியிலும் இந்தியாவுக்கு ஒரு பதக்கம் உறுதியாகியுள்ளது. மகளிர் டி20 இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்று ஒரு பதக்கத்தை உறுதி செய்துள்ளது. இதில் வென்றால் தங்கம், தோற்றால் வெள்ளி கிடைக்கும். இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அல்லது இலங்கையுடன் இந்தியா மோதவுள்ளது. இந்தப் பிரிவில் இந்தியா தங்கப் பதக்கம் வெல்லும் என்ற பலத்த எதிர்பார்ப்பு உள்ளது.
முன்னதாக அரை இறுதிப் போட்டியில் ஸ்மிரிதி மந்தனா தலைமையிலான இந்திய அணி வங்கதேசத்தை அதிரடியாக வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.