ஆசியக் கோப்பை :  "கப்"பை நெருங்கியது இந்தியா.. பைனலில் மோதப் போவது பாகிஸ்தானா?

Aadmika
Sep 13, 2023,09:36 AM IST
கொழும்பு : ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, பைனலுக்குள் கம்பீரமாக நுழைந்துள்ளது இந்திய அணி.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் 2023 போட்டிகள் தற்போது இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய ஆறு அணிகள் பங்கேற்றன. இதில் சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நான்கு அணிகள் தகுதி பெற்றன. 

சூப்பர் 4 சுற்றின் லீக் போட்டிகள் கடந்த சில நாட்களாக நடந்து வந்தன. இன்று பைனலுக்குள் நுழைவதற்கான போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் மோதின. கொலும்புவில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆரம்பமே அதிரடியாக துவக்கியது ரோஹித் சர்மா  -  சுப்மன் கில் ஜோடி. ரோகித் சர்மா அரைசதம் அடித்ததுடன், மிக வேகமாக 10,000 ரன்களை கடந்த இரண்டாவது வீரர் என்ற வரலாற்று சாதனையையும் நிகழ்த்தினார். ஆசிக் கோப்பையில் அவர் அடித்த 3வது அரைசதம் இதுவாகும். 

ரோகித் சர்மாவின் அதிரடி ஆட்டத்தால் ஓப்பனிங் பாட்னர்ஷிப்பே 80 ரன்கள் குவித்தது இந்திய அணி. இலங்கை பவுலர்களின் பந்துகளை நாலாபுறமும் சிதற விட்டனர் இந்திய வீரர்கள். இதனால் இந்தியாவின் ஸ்கோர்ட் மளமளவென உயர்ந்தது. இந்திய அணி தரப்பில் ரோகித் சர்மா 53 ரன்களும், கில் 19 ரன்களும், ரோலி 4 ரன்களும் எடுத்தனர். கேஎல் ராகுல் - இஷான் கிஷான் ஜோடி 63 ரன்களை சேர்த்தது. அதற்கு பிறகு இந்திய அணியின் விக்கெட்கள் வேகமாக சரிந்தன. இறுதியாக 50 ஓவர்கள் முடிவில் இந்தியா அனைத்து விக்கெட்களையும் இழந்து 213 ரன்கள் எடுத்தது. 

214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, ஆரம்பம் முதலே விக்கெட்களை அடுத்தடுத்து இழந்தது. இலங்கை வீரர்கள் மிக சொற்ப ரன்களிலேயே அவுட்டாகி பெவிலியன் திரும்பினர். தனஞ்சய் சில்வா மட்டும் தனி ஆளாக நின்று 63 ரன்கள்  எடுத்தார். இந்திய தரப்பில் ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்களையும், குல்தீப் யாதவ் 5 விக்கெட்களையும் கைப்பற்றினர். இறுதியாக 41 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.   

ஆசிக்கோப்பை தொடரில் இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று 2 புள்ளக்ளுடன் சமநிலையில் உள்ளன. அடுத்ததாக இலங்கை - பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. இதில் வெற்றி பெறும் அணி, பைனலில் இந்தியாவுடன் மோதும். இதற்கு முன் செப்டம்பர் 15 ம் தேதி இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் வங்கதேச அணியையும் எதிர்கொள்ள உள்ளன.