நிதி கமிஷன் தலைவராக அரவிந்த் பனகாரியா நியமனம்
டில்லி : நிதி கமிஷனின் புதிய தலைவராக அரவிந்த் பனகாரியா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நிதி ஆயோக்கின் துணை தலைவராக இருந்தவர் ஆவார்.
நிதி ஆயோக் அமைப்பின் முன்னாள் துணை தலைவராக இருந்த அரவிந்த் பனகாரியாவை நாட்டின் 16வது நிதி கமிஷன் தலைவராக மத்திய அரசு நியமித்துள்ளது. நிதி கமிஷனின் செயலாளராக ரித்விக் ரஞ்சனம் பாண்டே செயலாற்ற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி கமிஷனில் இடம் பெற உள்ள மற்ற உறுப்பினர்களின் விபரங்களும் தனித்தனியாக வெளியிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. .
இந்திய-அமெரிக்க பொருளாதார வல்லுநரான அரவிந்த் பனகாரியா, கொலம்பியா பல்கலைக்கழகத்தில் இந்திய அரசியல் பொருளாதாரம் குறித்து கற்றுத்தரும் பேராசிரியராக இருந்தவர். 2015ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை நிதி ஆயோக் துணத தலைவர் பதவி விகித்த இவர் அதிலிருந்து வெளியேறுவதாக திடீரென தெரிவித்தார். மத்திய அரசுடனான கருத்து வேறுபாடு காரணமாகவே இவர் நிதிஆயோத் துணை தலைவர் பதவியில் இருந்து விலகியதாக சொல்லப்பட்டது. ஆனால் திட்ட கமிஷனை முறைப்படுத்தும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதால், அந்த பணியின் காரணமாக அவர் துணைதலைவர் பதவியில் இருந்து விலகுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
2026 ம் ஆண்டில் இந்தியா உலகின் 3வது மிகப் பெரிய பொருளாதார நாடாக வளர்ச்சி பெற்றிருக்கும் என அரவிந்த் பனகாரியா இந்த ஆண்டின் துவக்கத்தில் தெரிவித்திருந்தார். கடந்த 20 ஆண்டுகளில் இந்தியா சராசரி ஆண்டு வளர்ச்சி 10.22 சதவீதமாக இருந்து வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.