கெஜ்ரிவால் ஆரம்பத்தில் நல்லாத்தான் இருந்தார்.. பிறகுதான் கெட்டுப் போய் விட்டார்.. அன்னா ஹசாரே
டெல்லி: டெல்லி முதல்வராக ஆரம்பத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் நன்றாகத்தான் செயல்பட்டார். ஆனால் எப்போது மதுக் கடைகளைத் திறந்து அதில் அவர் கவனம் திரும்பினாரோ அப்போதே மக்களின் அதிருப்தியை சம்பாதிக்க ஆரம்பித்து விட்டார் என்று பிரபல சமூக செயற்பாட்டாளர் அன்னா ஹசாரே கூறியுள்ளார்.
அண்ணா ஹசாரே முன்னின்று நடத்திய ஊழல் எதிர்ப்பு இயக்கத்திலிருந்து உருவாகிய ஆம் ஆத்மி கட்சி, மக்கள் மத்தியில் அரசியல் மாற்றத்திற்கான ஒரு புதிய சக்தியாக உருவெடுத்தது. கெஜ்ரிவால் முதலில் நல்ல நிர்வாக திறன் கொண்டவர் என்று பாராட்டப்பட்டார். மக்களின் ஆதரவுடன் அவர் மூன்று முறை தில்லி முதல்வராக பதவி ஏற்றார்.
ஆனால், பின்னர் அவர் மது விற்பனை தொடர்பான புதிய கொள்கைகளை செயல்படுத்தியபோது, அதில் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மது கடைகளுக்கான உரிமங்களை வழங்கும் முறையில் தவறுகள் இடம்பெற்றதாக மத்திய அரசின் CBI மற்றும் அமலாக்கத் துறை (ED) ஆகியவை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டன. இந்த விவகாரம் கெஜ்ரிவாலின் அரசியல் வாழ்க்கையில் மிகப்பெரிய பின்னடைவாக மாறியது.
இதன் விளைவாக டெல்லியில் சமீபத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில், பாஜக ஆட்சியை பிடித்து, கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி அதிகாரத்தில் இருந்து வெளியேற்றப்பட்டது. மேலும், கெஜ்ரிவால் தனது சொந்த தொகுதியில் கூட தோல்வி அடைந்தது, அவருக்கு மிகப்பெரிய அரசியல் பின்னடைவாக அமைந்தது.
இந்த நிலையில் கெஜ்ரிவாலின் வீழ்ச்சி குறித்து அன்னா ஹசாரே கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், கெஜ்ரிவால் ஆரம்பத்தில் நல்லாட்சி வழங்கினார், அதனால் நான் அவரை விமர்சிக்கவில்லை. ஆனால், அவர் மது கடைகளை அதிகம் திறந்து, உரிமங்களை வழங்கத் தொடங்கியபோது, அது மக்களின் எதிர்ப்பை சந்திக்க நேர்ந்தது. நானும் அதிருப்தி அடைந்தேன். இதன் விளைவாக, அவர் கடுமையான தோல்வியை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது,
டெல்லியின் புதிய முதல்வராக ரேகா குப்தா தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது பெருமைக்குரிய விஷயம். மக்கள் அவரை ஆதரித்ததன் முக்கிய காரணம், அவரின் நேர்மையான எண்ணங்களும் தூய்மையான செயல்களும் தான் என்று கூறியுள்ளார் அன்னா ஹசாரே.
அண்ணா ஹசாரே நீண்ட காலமாக மதுவிற்பனைக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். அரசியல் தலைவர்கள், குறிப்பாக முதல்வர் போன்ற பதவியில் இருப்பவர்கள், மக்களுக்கு ஒரு நேர்மையான முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்பது அவரது கருத்து.
அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் அரசியல் ரீதியாக நிலைநிறுத்தப்படுவாரா என்பது மிகப் பெரிய கேள்வியாக உள்ளது. அவர் மீது தொடரும் ஊழல் விசாரணைகள், அவரது எதிர்கால அரசியல் வளர்ச்சியை பாதிக்க அதிக வாய்ப்புள்ளது.
மக்களின் நம்பிக்கையை காக்காமல், தவறான முடிவுகளை எடுத்தால், அந்த மக்களே ஒருநாள் தலைவர்களை வீழ்த்திவிடுவார்கள்.. இதுதான் கெஜ்ரிவால் வீழ்ச்சி உணர்த்தும் பாடமாகும்.