மதுக் கொள்கை வழக்கில் கைது.. ஹைகோர்ட் உத்தரவை எதிர்த்து.. சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் அப்பீல்!

Meenakshi
Apr 10, 2024,05:54 PM IST

டெல்லி: மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலின் வழக்கை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்ததை தொடர்ந்து உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்.


புதிய மதுபான கொள்கை முறைகேடு விவகாரத்தில் டெல்லி  முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. விசாரணைக்கு ஆஜராகாத கெஜ்ரிவால், டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடி வந்தார். இந்த விவகாரத்தில் நீதிமன்றம் கைவிட்ட நிலையில், கடந்த 21ஆம் தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்க துறையால், அதிரடியாக கைது செய்யப்பட்டார்.இந்த கைது நடவடிக்கையை எதிர்த்து,  உடனடியாக தன்னை விடுவிக்க கோரியும் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.




இந்நிலையில்,அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்வர்ணகாந்த் சர்மா தீர்ப்பளிக்கையில், அந்த மனு மீதான விசாரணையில் கெஜ்ரிவாலின் பங்கு இருப்பது, அமலாக்கத்துறை ஆதாரங்களில் இருந்து தெரிய வருகிறது. டெல்லி மதுபான கொள்கை உருவாக்கத்தில் மனுதாரர் அரவிந்த் கெஜ்ரிவால் முக்கிய  பங்காற்றி உள்ளார் என்று கூறி டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார். 


டெல்லி ஹைகோர்ட் தீர்ப்பை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் இன்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.  தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்டை சந்தித்து இந்த வழக்கை அவசரமாக விசாரணைக்கு எடுக்க கெஜ்ரிவால் தரப்பு வழக்கறிஞர்கள் வலியுறுத்தியுள்ளனர்.