என்னாது.. பஞ்சாப் தேர்தலில் போட்டியிடப் போகிறாரா கெஜ்ரிவால்?.. பரபரக்கும் அரசியல் களம்!

Manjula Devi
Feb 11, 2025,03:10 PM IST

டெல்லி: டெல்லி சட்டமன்ற தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி படு தோல்வியை சந்தித்த நிலையில், கெஜ்ரிவாலின் பார்வை பஞ்சாப் பக்கம் திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


பஞ்சாபில்  காலியாக உள்ள லூதியானா சட்டமன்ற தொகுதியில் கெஜ்ரிவால் போட்டியிடப் போவதாகவும், பஞ்சாப் முதல்வர் பதவியில் கூட அவர் அமர வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் இறக்கை கட்டிப் பறக்கின்றன.


டெல்லியில் உள்ள 70 சட்டசபைத் தொகுதிகளுக்கும் பிப்ரவரி 5ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் மொத்தம் 60.5% வாக்குகள் பதிவாகி இருந்தன. எட்டாம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் பாஜக 48 இடங்களையும் , ஆம் ஆத்மி 22 இடங்களையும் கைப்பற்றின. காங்கிரஸுக்கு ஒரு இடமும் கிடைக்கவில்லை. ஆட்சியை இழந்தது ஆம் ஆத்மி கட்சி.




பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களை பெற்று பாஜக ஆட்சியை கைப்பற்றியது. அதே சமயத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வியை தழுவினார்.  முக்கியத் தலைவர்களும் கூட தோல்வியடைந்தனர். முன்னாள் முதல்வர் அதிஷி மட்டுமே ஜெயித்தார். 


இந்த நிலையில் தற்போது ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலம் பஞ்சாப் மட்டுமே. கடந்த 2022 ஆம் ஆண்டு 117 தொகுதிகளை கொண்ட பஞ்சாப் சட்டமன்றத்துக்கு நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 92 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. பஞ்சாப் முதல்வராக பகவந்த் மான் பொறுப்பேற்றார். இருப்பினும் டெல்லியில் இருந்தபடி பஞ்சாப் அரசையும் கெஜ்ரிவாலே இயக்கி வருவதாக குற்றச்சாட்டு உள்ளது.


இந்த நிலையில் மானுக்கு எதிராக அங்கு உட்கட்சிப் பூசல் வெடித்துள்ளது. சில எம்.எல்.ஏக்கள் அவருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இந்தச் சூழ்நிலையில் பஞ்சாப் முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்களை டெல்லிக்கு வரவழைத்துள்ளார் கெஜ்ரிவால். அவர்களுடன் முக்கிய  ஆலோசனை நடத்துகிறார்.


இதில் 2027 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் குறித்து விவாதிக்கலாம் என கூறப்படுகிறது. அதே சமயத்தில் பஞ்சாபில் காலியாக உள்ள லூதியானா சட்டமன்ற தொகுதியில் அரவிந்த் கெஜ்வால் போட்டியிட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 


ஆம் ஆத்மி கட்சி தற்போது அரசியல் செல்வாக்கு பஞ்சாப் மாநிலத்திலேயே உள்ளதால் அங்கு காலியாக உள்ள லூதியானா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் பஞ்சாப் அரசாங்கத்தில் தனது செல்வாக்கை பெறுவதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் காரசாரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. ஒரு வேளை பஞ்சாப் முதல்வராகவும் கெஜ்ரிவால் திட்டம் ஏதும் வைத்துள்ளாரா என்று தெரியவில்லை.