"உங்க கணவன்மார்கள்.. மோடி பெயரைச் சொன்னா.. ராத்திரி சோறு போடாதீங்க".. கெஜ்ரிவால் அதிரடி!

Su.tha Arivalagan
Mar 10, 2024,06:50 PM IST

டெல்லி: உங்க வீட்டுக்காரங்க பிரதமர் மோடி பெயரைச் சொன்னாலோ அல்லது அவரது கட்சிக்கு வாக்களித்தாலோ, அவர்களுக்கு ராத்திரிக்கு சோறு போடாதீங்க என்று பெண்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ள டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால்.


தேர்தல் களம் கலகலக்க ஆரம்பித்துள்ளது.  ஆங்காங்கே கலப்புகளும் அரங்கேறிக் கொண்டுள்ளன. தலைவர்களின் பேச்சுக்களில் அனல் கக்கிக் கொண்டிருந்தாலும், ஆங்காங்கே ஐஸ் போன்ற குளிர்ச்சியான கலகல கமெண்ட்டுகளும் எட்டிப் பார்க்கத்தான் செய்கின்றன.


முன்பெல்லாம் ஒரே ஒரு திண்டுக்கல் சீனிவாசன்தான் மட்டும்தான் பேசிக் கொண்டு இருந்தார். இப்போது கிட்டத்தட்ட எல்லோருமே திண்டுக்கல் சீனிவாசன் போல பேச ஆரம்பித்து விட்டதால்  நகைச்சுவைகளுக்கு பஞ்சமே இல்லை.




நம்ம ஊரில் மட்டும்தான் இப்படி ஜாலியா சிரிப்பூட்டுவாங்கன்னு இல்லை.. இந்தியாவின் இதர பகுதிகளிலும் இதே களேபரம்தான் கலக்கிக் கொண்டிருக்கிறது. நம்ம டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அப்படி ஒரு சிரிக்க வைக்கும் பேச்சை சிந்தியுள்ளார்.


கெஜ்ரிவால் என்ன சொல்லியிருக்கிறார் என்றால், "பெண்களே உங்களது கணவர் மார்கள், மோடி பெயரைச் சொன்னாலோ அல்லது அவரது கட்சிக்கு வாக்களிப்பேன் என்று சொன்னாலோ அவங்களுக்கு ராத்திரிக்கு சோறு போடாதீங்க" என்று  கூறி அதிர வைத்திருக்கிறார். பெண் வாக்காளர்களுக்குத்தான் அவர் இப்படி ஒரு கோரிக்கையை வைத்து களேபரத்தைக் கிளப்பியுள்ளார்.


ராத்திரி சோறு போடாதீங்க


டெல்லி டவுன்ஹாலில் நடந்த பெண்கள் மாநாட்டில் கலந்து கொண்டு கெஜ்ரிவால் பேசும்போது அவர் கூறியது:


பல ஆண்கள் மோடி பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஏதோ மந்திரம் போல ஜெபித்துக் கொண்டுள்ளனர். அதை சரி செய்ய வேண்டிய பொறுப்பும், கடமையும் உங்களுக்குத்தான் உள்ளது. உங்களது கணவர்மார்கள் மோடி பெயரைச் சொன்னால், அவருக்கு ராத்திரிக்கு சோறு போடாதீங்க.


பாஜகவை ஆதரிக்க மாட்டோம், ஆம் ஆத்மிக்கே ஓட்டுப் போடுவோம் என்று உங்க வீட்டு உறுப்பினர்களிடம் சத்தியம் வாங்குங்க.  பாஜகவை ஆதரிக்கும் உங்கள் வீட்டுப் பெண்கள், உங்களது தோழியரிடம், உங்களது அண்ணன் கெஜ்ரிவால்தான் உங்களுக்குத் துணை நிற்பார் என்று சொல்லுங்க.


நான்தான் பெண்களுக்கு மின்சாரத்தை இலவசமாக்கினேன், பஸ்களில் இலவச பயணத்தை ஏற்படுத்தினேன். இதோ இப்போது மாதந்தோறும் 18 வயதான பெண்களுக்கு  ரூ. 1000 தொகை தரப் போகிறேன் என்று சொல்லுங்க. பாஜக பெண்களுக்கு என்ன செய்தது. ஏன் பாஜகவுக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும். கெஜ்ரிவாலுக்கு வாக்களியுங்கள் என்று அவர்களிடம் சொல்லுங்கள்.


பெண்களை எப்படி பலமானவர்களாக மாற்றுவது


பெண்களை வலிமையாக்குகிறோம், அதிகாரம் படைத்தவர்களாக்குகிறோம் என்ற பெயரில் மிகப் பெரிய மோசடியில் பலர் ஈடுபட்டுள்ளனர். பெண்களுக்கு கட்சியில் ஏதாவது ஒரு போஸ்ட் தர வேண்டியது.. அதை வைத்து நாங்கள் பெண்களை அதிகாரம் மிக்கவர்களாக்கி விட்டோம் என்று கூறுவது. பதவி கொடுத்தால் அவர்கள் அதிகாரம் படைத்தவர்களாகி விடுவார்களா.. இது ஏமாற்றுத்தனம் இல்லையா.  இவர்கள் இப்படி பதவி கொடுப்பதால் 2 பெண்களோ, 4 பெண்களோதான் பலன் அடைவார்கள். மற்ற பெண்களுக்கு என்ன பலன் கிடைக்கும். அப்படியானால் இது ஏமாற்றுத்தனம்தானே?


ஆனால் எனது அரசின் முக்கியமந்திரி பெண்கள் முன்னேற்றத் திட்டம் உண்மையான வலிமையை, அதிகாரத்தை பெண்களுக்கு வழங்கும்.  பெண்கள் கையில் பணம் இருந்தால்தான் அவர்களுக்கு வலிமை கிடைக்கும். அப்போதுதான் உண்மையான பலம் அவர்களுக்குக் கிடைக்கும். அதனால்தான் நாங்கள் மாதந்தோறும் ரூ. 1000 வழங்குகிறோம் என்றார் கெஜ்ரிவால்.


கெஜ்ரிவால் சொல்லும் இந்த மாதம் ரூ.1000 திட்டத்தை பல மாதங்களுக்கு முன்பே தமிழ்நாட்டில் திமுக அரசு அமல்படுத்தி வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது என்பது நினைவிருக்கலாம்.