"பாஜகவுடன் இணைய என்னை கட்டாயப்படுத்துகிறார்கள்".. கெஜ்ரிவால் பரபரப்பான குற்றச்சாட்டு..!
புதுடெல்லி: தன்னை பாஜகவில் சேர வற்புறுத்துவதாகவும், அவர்களது அழுத்தங்களுக்குப் பணிந்து, நான் பாஜகவுடன் ஒருபோதும் சேரப் போவதில்லை எனவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார் டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால்.
மத்திய அரசு எங்களுக்கு எதிராக என்ன சதி செய்ய முயன்றாலும் நான் அடிப்பணிய மாட்டேன் எனவும் அவர் கடுமையாக கூறியுள்ளார்.
டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான கெஜ்ரிவால் ஊழலுக்கு எதிரான ஆட்சியை கொண்டுவர வேண்டும் என்ற கொள்கையுடன் அரசியலுக்கு வந்தவர். இன்று டெல்லி முதல்வராக அவர் இருக்கிறார். அருகில் உள்ள பஞ்சாப் மாநிலத்திலும் ஆம் ஆத்மியே ஆட்சி நடத்தி வருகிறது. டெல்லியில் இரண்டு முறை முதல்வராக பதவி வகித்துள்ள கெஜ்ரிவாலுக்கும், மத்திய அரசுக்கும் இடையே முட்டல் மோதல் இருந்து வருகிறது. ஆளுநருக்கும், கெஜ்ரிவாலுக்கும் தொடர்ந்து மோதல் இருந்து வருகிறது.
மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை ஐந்து முறை ஆஜராக சமன் அனுப்பி இருந்தது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதன் காரணமாக அமலாக்க துறையினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். இந்த வழக்கு விசாரணை வரும் 7 ஆம் தேதி டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் 7 எம்எல்ஏக்களிடம் பாஜக ரூபாய் 25 கோடி பேரம் பேசுவதாக கெஜ்ரிவால் பரபரப்பான புகாரைக் கூறியிருந்தார். இந்த நிலையில் தன்னை பாஜகவில் சேருமாறு அழுத்தம் தருவதாக கெஜ்ரிவால் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், பாஜகவுடன் ஒரு போதும் சேரப் போவதில்லை. மத்திய அரசு எங்களுக்கு எதிராக என்ன சதி செய்ய முயன்றாலும் நான் அடிபணிய மாட்டேன்.
பள்ளி, மருத்துவமனைக்கு மத்திய அரசு பட்ஜெட்டில் 4 சதவீதம் மட்டுமே செலவு செய்கிறது. ஆனால் டெல்லி அரசு ஒவ்வொரு ஆண்டும் பள்ளி, மருத்துவமனைகளுக்கு பட்ஜெட்டில் 40 சதவீதம் செலவு செய்கிறது என அரவிந்த் கெஜ்ரிவால் பேசியுள்ளார்.