என்னதான் படித்துள்ளார் பிரதமர் மோடி.. சந்தேகம் அதிகரிக்கிறது.. கெஜ்ரிவால் மீண்டும் கேள்வி!
Apr 01, 2023,12:40 PM IST
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் படிப்பு குறித்து குஜராத் ஹைகோர்ட் அளித்துள்ள உத்தரவு மேலும் பல சந்தேகங்களை அதிகரிக்கிறது. நாட்டின் பிரதமர் கல்வி அறிவு பெறாதவராக இருப்பது ஆபத்தானது என்று டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
கடந்த பல ஆண்டுகளாகவே பிரதமர் மோடியின் படிப்பு குறித்து விவாதங்களும், சர்ச்சைகளும் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோடியின் படிப்பு சான்றிதழ் குறித்த விவரங்களை வெளியிடுமாறு குஜராத் பல்கலைக்கழகம் மற்றும் டெல்லி பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு மத்திய தகவல் ஆணையர் உத்தரவிட்டிருந்தார். அதை எதிர்த்து குஜராத் பல்கலைக்கழகம் குஜராத் ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. அதில்தான் கெஜ்ரிவாலுக்கு அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் நரேந்திர மோடியின் படிப்பு சான்றிதழ் குறித்து விபரம் தர தேவையில்லை என்று குஜராத் ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக கெஜ்ரிவாலுக்கு அது ரூ. 25,000 அபராதமும் விதித்துள்ளது.
இந்த நிலையில் கெஜ்ரிவால் மீண்டும் பிரதமரின் கல்வி குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து கெஜ்ரிவால் கூறுகையில்,குஜராத் ஹைகோர்ட்டின் உத்தரவு பல கேள்விகளை எழுப்புகிறது. படிக்காத ஒருவர் அல்லது குறைந்த கல்வி அறிவு கொண்ட ஒருவர் பிரதமராக இருப்பது நாட்டுக்கு ஆபத்தானது என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார்.