கொத்தனாரின் மகன் டூ ஒலிம்பிக் தங்கம்.. அசத்தல் சாதனை படைத்த பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம்

Su.tha Arivalagan
Aug 09, 2024,05:56 PM IST

கராச்சி: தந்தை சாதாரண கொத்தனார்.. கூலி வேலை பார்ப்பவர்.. மிக மிக எளிய குடும்பப் பின்னணி.. அங்கிருந்து புயல் வேகத்தில் பாய்ச்சல் எடுத்து இன்று, ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்று பலருக்கும் முன்னுதாரணமாக மாறியுள்ளார் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம்.


பாகிஸ்தானுக்கு கிடைத்துள்ள முதல் தனி நபர் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் இது என்பதால் அந்த நாடே நதீமைக் கொண்டாடி வருகிறது. 27 வயதாகும் நதீம், பஞ்சாப் மாநிலம் கானேவால் கிராமத்தைச் சேர்ந்தவர். மிக மிக எளிய குடும்பம். இவரது தந்தை கூலிக்கு வேலை பார்க்கும் கொத்தனார். பெரிய வருமானம் கிடையாது. விருப்பபடி சாப்பிட முடியாது. என்ன இருக்கிறதோ அதுதான். சில நேரங்களில் சாப்பாடே இல்லாமல் பட்டினியும் கூட கிடப்பார்களாம். 


நதீமின் பெற்றோருக்கு மொத்தம் 7 பிள்ளைகள். பெரிய குடும்பம் என்பதால் தேவைகளும் அதிகம், செலவு செய்ய பணம் இல்லாத சூழலும் கூட. ரம்ஜான் பண்டிகையின்போதுதான் இறைச்சி சாப்பிடுவார்களாம். அதுதான் அவர்களது ஆடம்பர செலவாம். அப்படியென்றால் அவர்களது குடும்பத்தின் நிலையைப் புரிந்து கொள்ளலாம்.  இப்படிப்பட்ட குடும்பத்திலிருந்து வந்த நதீம் இன்று ஒட்டுமொத்த பாகிஸ்தானுக்கும் பெருமை தேடித் தந்துள்ளார்.


வாழ்க்கை முழுவதும் தான் சந்தித்த கஷ்டங்கள், அவமானங்கள், துயரங்கள், கண்ணீர், வேதனை இப்படி எல்லாவற்றையும் மொத்தமாக குவித்து, 92.97 மீட்டர் தூரத்திற்கு அதை எறிந்து சாதனை படைத்துள்ளார் நதீம். இதில் என்ன சுவாரஸ்யம் என்றால் நதீமின் பெஸ்ட் பிரண்டான இந்தியாவின் நீரஜ் சோப்ராவைத்தான் அவர் தோற்கடித்துள்ளார். அதனால் என்ன இருவருமே சகோதரர்கள்தானே.. அதனால்தான், நீரஜ் சோப்ராவின் தாயார், நதீமையும் என் பிள்ளைதான் என்று கூறி வாழ்த்தியுள்ளார்.




ஆனால் நதீம் இந்த இடத்திற்கு வருவது அத்தனை சாதாரணமாக இல்லை. மிக மிக கஷ்டப்பட்டுத்தான் இந்த உயரத்தைப் பிடித்திருக்கிறார். ஈட்டி வாங்கக் கூட அவரிடம் பணம் இல்லாதபோது அவரது கிராமமே சேர்ந்து அவருக்காக பணம் சேகரித்து ஈட்டி வாங்கிக் கொடுத்தது. அவருக்குத் தேவையான ஒவ்வொன்றையும் அந்தக் கிராமத்தினர்தான் வாங்கிக் கொடுத்துள்ளனர். மிகப் பெரிய உதவி செய்துள்ளனர், அவருக்கு உறுதுணையாக இருந்துள்ளனர். இதனால் அவர் பல இடங்களுக்கும் போய் பயிற்சி எடுக்க முடிந்துள்ளது.


பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பாகிஸ்தானிலிருந்து மொத்தம் 7 பேர்தான் பங்கேற்றனர். அதில் ஆறு பேர் அவரவர் போட்டிகளில் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறத் தவறி விட்டனர். நதீம் மட்டுமே பாகிஸ்தானுக்கு ஆறுதலுடன், சாதனையையும் பரிசாக கொடுத்து சந்தோஷப்படுத்தியுள்ளார்.


நதீமுக்கு இது முதல் பதக்கம் அல்ல. கடந்த ஆண்டு நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். 2022 காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்றுள்ளார். அப்போது அவர் எறிந்த தூரம் 90.18 மீட்டராகும். காமன்வெல்த் சாதனையை இந்த ஒலிம்பிக்கில் அவர் முறியடித்துள்ளார். மேலும் கடந்த 32 வருடங்களாக பாகிஸ்தான் அணி ஒரு பதக்கத்தையும்  வெல்ல முடியாமல் இருந்தது. அந்த வறட்சியையும் நதீம் போக்கியுள்ளார்.


ஈட்டி எறிதலில் நதீமுக்கும், சோப்ராவுக்கும் இடையிலான உறவு மிகப் பெரியது. இருவரும் ஒருவரை ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு வெல்வது மட்டுமல்ல , நதீமுக்காக குரல் கொடுப்பதிலும் சோப்ரா முதல் ஆளாக நிற்பார். தனது பயிற்சிக்காக புதிய ஈட்டி தேவை என்று நதீம் கோரிக்கை வைத்தபோது, அதற்கு முதல் ஆளாக வந்து சோப்ராதான் ஆதரவு அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


ஒவ்வொரு சாதனைக்குப் பின்னும் நிறைய வலிகள் இருக்கும்.. அதையெல்லாம் விலக்கிக் கொண்டு வெளியில் வரும்போதுதான் வெற்றிக்கான வழி கிடைக்கும்.. நீரஜ் சோப்ரா, நதீம் போன்றோர் அதற்கு சிறந்த உதாரணங்கள்.