ராபின் உத்தப்பாவுக்கு பிடிவாரண்ட்.. ஊழியர்களிடம் பிடித்த பிஎப் பணத்தை செலுத்தாமல் ஏமாற்றிய வழக்கில்!
பெங்களூரூ: முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா தான் நடத்தி வரும் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களிடம் பிடித்த சேம நல நிதி பணத்தை கட்டாமல் ஏமாற்றியதாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவைச் சேர்ந்தவர் ராபின் உத்தப்பா. கிரிக்கெட் வீரரான இவர் இந்திய அணியில் இடம் பெற்று முக்கிய வீரராக வலம் வந்தவர். ஐபிஎல் போட்டிகளிலும் விளையாடி வருபவர். ராபின் உத்தப்பா செஞ்சுரிஸ் லைப்ஸ்டைல் பிரான்ட் பிரைவேட் லிமிட்டெட் என்ற நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். அதில் பணியாற்றிய ஊழியர்களுக்கு பிஎப் பிடிக்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் பிடித்தம் செய்த ரூ. 23 லட்சம் பணத்தை ஊழியர்களின் கணக்கில் ராபின் உத்தப்பாவின் நிறுவனம் செலுத்தவில்லை என்று தெரிகிறது.
இதையடுத்து அவருக்கு பலமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் உரிய பதில் தரப்படவில்லை என்பதால் பிஎப் பிராந்திய ஆணையாளர் சடாக்ஷரி கோபால் ரெட்டி, பெங்களூர் புலிகேசி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார் தற்போது ராபின் உத்தப்பாவை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ராபின் உத்தப்பா முன்பு வசித்து வந்த முகவரியில் தற்போது இல்லை என்பதால் அவரைத் தேடி வருகிறோம் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022ம் ஆண்டு அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்றார் ராபின் உத்தப்பா. வலது கை பேட்ஸ்மேன் ஆன ராபின் உத்தப்பா விக்கெட் கீப்பராகவும் செயல்பட்டவர். 46 ஒரு நாள் போட்டிகள், 205 ஐபிஎல் போட்டிகளில் ராபின் உத்தப்பா விளையாடியுள்ளார். கடைசியாக அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடினார் என்பது நினைவிருக்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்