Aranmanai 4 Review: எப்படி இருக்கு சுந்தர். சியின் அரண்மனை 4?.. ஒரு மின்னல் விமர்சனம்!
- இந்துமதி
சுந்தர். சி மற்றும் பேய்ப் பட ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தன அரண்மனை4 படம் இன்று திரைக்கு வந்துள்ளது. அனைவரும் எதிர்பார்க்கும் வகையில் இந்தப் படம் இருக்கா..?
வாங்க, விமர்சனத்தைப் பார்ப்போம்!
சுந்தர் சி யோட அரண்மனை படங்கள் எல்லாமே பேய் படமாக தான் இருக்கும். பெரிய அரண்மனை இருக்கும், அதுல ஒரு பேய் குடியிருக்கும். அந்தப் பேய்க்கும், அந்த வீட்டுக்கு வருவோருக்கும் இடையே முட்டல் மோதல் நடக்கும். கடைசியில் பேய் செத்துப் போகும்.. கிட்டத்தட்ட எல்லாம் ஒரே மாதிரியான கதையாக தான் இருக்கும். சுந்தர்சியோட முந்தைய மூன்று படங்களுமே இப்படியான கதையாக இருந்தது. அரண்மனையில் இருக்கும் பேய் அங்கு புதிதாக வரும் குடும்பத்தினரை பழிவாங்கும் படலமே திரைக்கதையாக இருக்கும்.
இதை தற்போது கொஞ்சம் மாற்றி தற்போதைய டிரண்டுக்கு ஏத்த மாதிரி திரைக் கதையை கொண்டு சென்றிருக்கிறார் சுந்தர். சி.வழக்கமாக குடியிருக்கும் யாராவது ஒரு நபர் மீது பேய் இறங்கும். அந்த பேயை விரட்டுவது போல கதையாக அமைத்து இருப்பார். அரண்மனை 4 படத்தில் கொஞ்சம் வித்தியாசமாக கடவுளுக்கு எதிராக சாத்தான் இருப்பது போன்று மாற்றியுள்ளனர்.
சுந்தர்.சி வழக்கறிஞர். அவருக்கு தங்கையாக தமன்னா... தங்கை காதலித்து கல்யாணம் செய்து கொள்கிறார். அவருக்கு கணவராக சந்தோஷ் பிரதாப் நடித்திருக்கிறார். இவர்களுக்கு இரு குழந்தைகள். தனியாக ஒரு அரண்மனை போன்ற பழைய வீட்டில் குடியிருக்கிறார்கள். இந்நிலையில் தமன்னாவின் கணவர் ஒரு நாள் காலையில் வாக்கிங் போகும்போது அவரை ஒரு சாத்தான் கீழே தள்ளி அவர் உடலில் புகுந்து விடுகிறது. அவர் உடலில் புகுந்த அந்த சாத்தான், அவருடைய பெண் குழந்தையை கொல்ல திட்டமிட்டுகிறது.
கணவர் உடலில் சாத்தான் புகுந்திருப்பதை தெரிந்து கொண்ட தமன்னா குழந்தையை காப்பாற்ற முயற்சிக்கிறார். அந்த முயற்சியில் தமன்னாவை கொன்று விடுகிறது சாத்தான். கூடவே தமன்னாவின் கணவரும் கொல்லப்படுகிறார். தங்கையும் தங்கை கணவரும் இறந்ததை கேள்விப்பட்டு அந்த ஊருக்கு வருகிறார் சுந்தர் சி . ஊருக்கு வந்து விசாரிக்கும் போது இதே மாதிரி மேலும் இருவர் இறந்து போயிருக்கிறார்கள் என்று தெரிய வருகிறது. அதன் பிறகு என்ன நடக்கிறது.. தமன்னாவின் அத்தியாயம் அத்தோடு முடிந்ததா.. தங்கை மற்றும் தங்கை கணவரைக் கொன்ற சாத்தான் என்ன ஆனது.. சுந்தர். சி தனது முயற்சிகளில் வெற்றி பெற்றாரா. இது மீதக் கதை.
சுந்தர் சி யோட எல்லா படங்களிலும் காமெடிக்கு முக்கியத்துவம் இருக்கும். பேயாகவே இருந்தாலும் காமெடியும் சூப்பராக கலந்திருக்கும். அதே மாதிரி இந்த படத்திலும் யோகி பாபு, விடிவி கணேஷ், கோவை சரளா ஆகியோர் தனி டீமாக காமெடியில் கலக்கியுள்ளனர். மொட்டை ராஜேந்திரன் அவ்வப்போது வந்து செல்கிறார். இத்தனை பேர் இரு்நதாலும் கூட முந்தைய படங்கள் போல இந்தப் படத்தில் காமெடி பெரிதாக ஈர்க்கவில்லை என்றே சொல்ல வேண்டும். ஏற்கனவே வந்த காமெடி படங்களை பல இடங்களில் நினைவுபடுத்துகிறது.
காமெடி குறைவாக இருந்தாலும் சண்டைக் காட்சிகளுக்குப் பஞ்சமில்லை. படத்தில் நிறைய சண்டை காட்சிகள் வைத்திருக்கிறார்கள். அதிலும் படம் தொடங்கும் போது ஒரு சண்டை காட்சி வருகிறது. அது எதற்காக என்றே தெரியவில்லை. இப்படி படம் முழுக்க சண்டைகளும் நிறைய வந்து போகின்றன.
ராஷி கண்ணா சுந்தர்.சி.க்கு ஜோடியாக வருவார் என நினைத்தால் இல்லை, கவர்ச்சியான டாக்டராக மட்டுமே வந்து போகிறார். இதனால் சப்பென்று இருக்கிறது. கிராபிக்ஸ் காட்சிகள் பிரமாதமாக செய்து இருக்கிறார்கள், அதை நிச்சயம் பாராட்ட வேண்டும். படம் முன் பாதியை விட இடைவேளைக்குப் பிறகு விறுவிறுப்பாக செல்கிறது. கிளைமாக்ஸில் வரும் சண்டைக் காட்சிகள் நன்றாக உள்ளது. கூடே, குஷ்பூவும் சிம்ரனும் ஒரு பாட்டிற்கு நடனம் ஆடி இருக்கிறார்கள். சும்மா சொல்லக் கூடாதுங்க, அதுவும் பார்க்க நன்றாகவே இருக்கிறது.
இசையில் சற்றே சொதப்பியுள்ளார் ஹிப்ஹாப் தமிழா. ஏற்கனவே வந்த படங்களில் கேட்ட அதே பாணி இசையைத்தான் பெரும்பாலும் கொடுத்திருக்கிரார். சற்று டிரெண்டுக்கு ஏற்றார் போல அவர் மாற வேண்டியது அவசியம். இந்த கோடை விடுமுறையில் குழந்தைகளை அழைத்து செல்ல நல்ல திரைப்படம். பரவாயில்லை ரகம்தான்.. ஆனாலும் பார்த்து ரசிக்கலாம்.. சிரித்து ரசிக்க முடியாவிட்டாலும் கூட சிலிர்த்து ரசிக்கலாம்.. காரணம், பேய் பயமுறுத்தல் நன்றாகவே படமாக்கப்பட்டிருக்கிறது. லாஜிக்கெல்லாம் பெரிதாக பார்க்காதவராக இருந்தால் நீங்க கண்டிப்பாக இந்தப் படத்தைப் பார்த்து ரசிக்கலாம்.
நடிகர்கள்
சுந்தர் .சி - சரவணன்
தமன்னா - செல்வி
ராஷி கண்ணா - மாயா
யோகி பாபு - மேஸ்திரி
டெல்லி கணேஷ் - ஜமீன்
கருடா ராம் - சுவாமி ஜீ
விடிவி கணேஷ் - கார்பெண்ட்டர்
கதை, திரைக்கதை, இயக்கம் - சுந்தர்.சி.
தயாரிப்பு - குஷ்பு சுந்தர் (Avni Cinemax P Ltd), ஏ.சி.எஸ் அருண்குமார் (Benzz Media Pvt Ltd)
இசை - ஹிப்ஹாப் தமிழா
திரைக்கதை வசனம் - வேங்கட்ராகவன்
ஒளிப்பதிவு - ஈ.கிருஷ்ணமூர்த்தி
படத்தொகுப்பு - பென்னி ஓலிவெர்
கலை இயக்குனர் - குருராஜ்
சண்டைப்பயிற்சி - ராஜசேகர்
நடனம் - பிருந்தா
பாடல்கள் - கோசேஷா, விக்னேஷ் ஶ்ரீ காந்த், முத்தமிழ்