ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி திருவேங்கடம் என்கவுன்டரில் சுட்டுக் கொலை.. அதிகாலை பரபரப்பு!
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடிகளில் ஒருவரான திருவேங்கடம் என்பவரை போலீஸார் என்கவுன்டர் மூலம் இன்று அதிகாலையில் சுட்டுக் கொன்றனர். சென்னை மாநகர ஆணையராக அருண் ஐபிஎஸ் பதவியேற்ற பின்னர் முதல் என்கவுண்டர் நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூரில் அவரது வீட்டுக்கு அருகே வைத்து கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் ரவுடி ஆற்காடு ரவியின் தம்பி பொன்னை பாலு உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் திருவேங்கடம் என்பவரும் ஒருவர்.
இந்த 11 பேரையும் தற்போது போலீஸார் விசாரணைக்காக காவலில் எடுத்துள்ளனர். 5 நாள் காவலில் எடுக்கப்பட்ட அவர்களிடம் ரகசிய இடத்தில் வைத்து பலத்த பாதுகாப்புடன் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விசாரணையின்போது பலமுக்கியத் தகவல்கள் சிக்கியுள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில் கொலை செய்யப் பயன்படுத்தப்பட்ட சில ஆயுதங்களை மீட்பதற்காக திருவேங்கடத்தை போலீஸார் இன்று அதிகாலையில் மதுரவாயல் ஏரிக்கரை பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு பதுக்கி வைக்கப்பட்ட ஆயுதங்களை திருவேங்கடம் எடுக்கும்போது திடீரென போலீஸார் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து தற்காப்புக்காக போலீஸார் சுட்டுள்ளனர். இதில் குண்டு பாய்ந்து திருவேங்கடம் படுகாயமடைந்தார். சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிகிறது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திருவேங்கடத்துக்கு முக்கிய பங்கு இருப்பதாக கூறப்படுகிறது. ஆம்ஸ்ட்ராங் நடமாட்டத்தை கிட்டத்தட்ட 10 நாட்களுக்கும் மேலாக கண்காணித்து ஸ்கெட்ச் போட்டுத்தான் கொலை செய்துள்ளனர். இந்தக் கொலை சதி திட்டத்தில் திருவேங்கடம் பெரும் பங்காற்றியதாக தகவல்கள் கூறுகின்றன.
முதல் என்கவுண்டர்
சமீபத்தில்தான் புதிய காவல் ஆணையராக ஏ. அருண் பொறுப்பேற்றார். அப்போது அவர் கொடுத்த பேட்டியின்போது ரவுடிகளுக்கு என்ன பாஷையில் பேசினால் புரியுமோ அந்த பாஷையில் அவர்களுக்கு எடுத்துச் சொல்லப்படும் என்று கேட்டார். அப்போது செய்தியாளர் ஒருவர் என்கவுண்டர் இருக்குமா என்று கேட்டபோது அப்படியெல்லாம் எதுவும் இல்லை என்று ஆணையர் அருண் கூறினார்.
செய்தியாளர் விடாமல், என்கவுண்டருக்கு வாய்ப்புண்டா என்று கேட்டபோது, ரவுடிகளுக்குப் புரியும் பாஷையில் எடுத்துச் சொல்வோம் என்று கூறியிருந்தார் கமிஷனர் அருண் என்பது குறிப்பிடத்தக்கது.