அர்ஜென்டினாவுக்கு கோபா அமெரிக்கா.. ஸ்பெயினுக்கு யூரோ 2024.. உற்சாகத்தில் உருளும் கால்பந்து ரசிகர்கள்
ஒலிம்பியா ஸ்டேடியம், பெர்லின்: ஜெர்மனியின் பெர்லின் நகரில் நடந்த யூரோ 2024 கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணி, இங்கிலாந்து அணியை வீழ்த்தி கோப்பையை வென்று அசத்தியுள்ளது. மறுப்கம், கோபா அமெரிக்கா சாம்பியன் பட்டத்தை அர்ஜென்டினா தட்டிச் சென்றுள்ளது. கொம்பியாவை இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா வீழ்த்தியது.
பெர்லினில் நடந்த யூரோ கோப்பை இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணியின் மாற்று வீரர் மைக்கேல் ஓயார்சபால் கடைசி நேரத்தில் கோலடித்து ஸ்பெயினுக்கு வெற்றித் தேடித் தந்தார். 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணியை, ஸ்பெயின் வென்று கோப்பையைக் கைப்பற்றியது. சர்வதேச அரங்கில் ஸ்பெயின் அணி நீண்ட இடைவெளிக்குப் பிறகு கோப்பையை வென்றிருப்பது அந்த நாட்டு ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது.
ஸ்பெயின் அணி போட்டியின் நடுவே சற்று தடுமாற்றத்தை சந்தித்தது. முன்னணி வீரர் ரோட்ரி காயம் காரணமாக வெளியேறினார். இதனால் மாற்று வீரராக களம் இறங்கிய மைக்கேல் வெற்றிக்கு வித்திட்டார். இந்தக் கோப்பையானது ஸ்பெயின் அணிக்கு 4வது யூரோ கோப்பையாகும். கடந்த 5 தொடர்களில் இது 3வது கோப்பையாகும். இதற்கு முன்பு 1964, 2008, 2012 ஆகிய ஆண்டுகளில் ஸ்பெயின் யூரோ கோப்பையை வென்றுள்ளது.
மறுபக்கம் இந்தத் தோல்வியால் இங்கிலாந்து அணி பெரும் சோகத்தில் மூழ்கியது. குறிப்பாக கேப்டன் ஹேரி கனே தனது 30 வயதில் இங்கிலாந்து அணிக்குத் தலைமை தாங்கி இறுதிப் போட்டி வரை கொண்டு வந்தார். நிச்சயம் கோப்பையை வெல்லும் என்று இங்கிலாந்து ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர். ஆனால் அது ஏமாற்றத்தில் முடிந்து விட்டது.
அர்ஜென்டினாவுக்கு கோபா அமெரிக்கா:
இதற்கிடையே, அமெரிக்காவில் நடைபெற்ற கோபா அமெரிக்கா கால்பந்து இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அபார வெற்றி பெற்று கோப்பையை வென்றது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி கார்டன் மைதானத்தில் கோபா அமெரிக்கா இறுதிப் போட்டி நடைபெற்றது. உலக சாம்பியன் அர்ஜென்டினா மற்றும் கொலம்பியா ஆகிய அணிகள் இதில் மோதின. லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணிக்கு பெரும் அதிர்ச்சியாக மெஸ்ஸிக்கு பாதியிலேயே காயம் ஏற்படவே அவர் ஆட்டத்தை விட்டு வெளியேறினார். இதனால் அர்ஜென்டினா அணி ரசிகர்கள் பெரும் பதைபதைப்புக்குள்ளானார்கள்.
ஆனால் அர்ஜென்டினா அணி மெஸ்ஸியின் வழிகாட்டுதலில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கொலம்பியாவுக்கு எதிராக அவர்கள் தற்காப்பு ஆட்டத்தைத் தேர்வு செய்தனர். இதனால் கொலம்பியாவால் கோலடிக்கவே முடியவில்லை. முழு ஆட்ட நேரத்தில் இரு அணிகளும் கோலடிக்காமல் போனதால் கூடுதல் நேரம் தரப்பட்டது. அதில் அர்ஜென்டினா தரப்பில் லாட்டரோ மார்டினஸ் அபாரமாக கோலடித்தார். ஆனால் கொலம்பியா அணி கோல் ஏதும் அடிக்க முடியாமல் போனதால் இறுதிப் போட்டியை அர்ஜென்டினா வென்று கோப்பையைத் தக்க வைத்துக் கொண்டது.
கடந்த 2021 தொடரிலும் அர்ஜென்டினாதான் சாம்பியன் பட்டம் வென்றது. தற்போதும் அது அந்தப் பட்டத்தைத் தக்க வைத்துக் கொண்டது.