3 விஜய், 2 சூர்யா.. தீனா டூ தர்பார் வரை, ஹீரோக்களை சூப்பர் ஹீரோக்களாக்கிய ஜாம்பவான்..ஏ.ஆர்.முருகதாஸ்

Manjula Devi
Sep 25, 2024,03:46 PM IST

சென்னை:  ஏ ஆர் முருகதாஸ் ஒரு புரட்சிகர இயக்குனராக தமிழ் திரையுலகில் அறியப்படுகிறார். அவருடைய முதல் படமான தீனாவிலேயே தனது விஸ்வரூபத்தைக் காட்டி மிரட்டியவர். 


தமிழில் இவர் இயக்கியது இதுவரை 8 படங்கள். தனது முதல் படத்திலேயே  அனைவருடைய கவனத்தையும் ஈர்த்து இருக்கிறார். அவருடைய முதல் படம் அஜித்துக்கும் முக்கியமான திரைப்படமாக அமைந்தது‌. அதேபோல்  முருகதாஸுக்கும் தமிழ் சினிமாவில் நல்ல  அறிமுகமும் கிடைத்தது. இதன் பின்னர் இவரின் இரண்டாவது படம் இந்திய அளவில் மிகப் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அது என்ன படம் என்றால் விஜயகாந்த் நடித்த ரமணா படம்தான். 




இதே படத்தை ரீமேக்காக  சிரஞ்சீவியை வைத்து இயக்கியதால் தெலுங்கு சினிமாவிலும் முருகதாஸுக்கு தனி இடம் கிடைத்தது. ரமணா படம் விஜயகாந்தின்  அரசியல் வாழ்க்கையில் மிகவும் உதவிகரமாக இருந்தது. அவரின் செல்வாக்கு உயர்வதற்கு இப்படம் முக்கியமான காரணமாகவும் அமைந்தது.


இதனை தொடர்ந்து கடந்த 2000ம் ஆண்டு முருகதாஸின் கஜினி திரைப்படம் வெளியானது. இப்படம்  ரசிகர்கள் மனதில் மிகப்பெரிய இடத்தைப் பிடித்துது. காரணம் இதன் கதை மற்றும் சூர்யாவின் நடிப்பு. இப்படத்தை இந்தியில் அமீர்கானை வைத்தும் இயக்கி அங்கும் ஹிட்டடித்தார் முருகதாஸ். 




அதே சூர்யாவை வைத்து பின்னர் ஒரு வித்தியாசமான கதை பின்னணியில் ஏழாம் அறிவு படத்தை இயக்கினார்.  இப்படம் வசூலில் பெரிய அளவில் போகாவிட்டாலும் கூட விமர்சன அளவில் பலராலும் பாராட்டப்பட்டது. அதன் பின்னர்தான் முருகதாஸின் அதிரடி அத்தியாயம் தொடங்கியது. காரணம் விஜய்யை வைத்து அடுத்தடுத்து ஹாட்ரிக் ஹிட்டாக 3 படங்களைக் கொடுத்தார் முருகதாஸ்.


விஜய் நடிப்பில் ஆக்சன் திரில்லர் திரைப்படமான துப்பாக்கி படத்தை இயக்கியிருந்தார் ஏ ஆர் முருகதாஸ். இப்படத்தின் கதை நகர்வுகள் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. அந்த காலகட்டத்தில் இப்படம் வசூல் ரீதியாக பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் 100 கோடி வசூலித்த இரண்டாவது தமிழ் படம் ஆகும். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் விஜய் கூட்டணியில் கத்தி படம் கொடுத்தார். இதுவும் மெகா ஹிட் ஆனது. இதையடுத்து சர்கார் படத்தையும் விஜய்யை வைத்து இயக்கினார் முருகதாஸ். 


துப்பாக்கி, கத்தி, சர்க்கார், ஆகிய மூன்று படங்களும் விஜய்யின் முக்கியமான படங்களாக உள்ளன. குறிப்பாக சர்க்கார் படத்தில் விஜய் முழுக்க முழுக்க தனது அரசியல் கருத்துக்களை அப்படத்தில் வெளிப்படுத்தி இருந்தார். இப்படத்தின் வசனங்களும் விஜயின் அரசியல் பிரதிபலிப்பாகவே இருந்தது. நடிகர் விஜய் எதிர்காலத்தில் ஒரு அரசியல்வாதியாக வருவார் என்ற எதிர்பார்ப்பும் இப்படத்தின் மூலமாகவே வெளிப்பட ஆரம்பித்தது. அதனால் தற்போது விஜய் ஆரம்பித்து செயல்படுத்தி வரும் தமிழக வெற்றி கழக கட்சிக்கு இப்படம் முழுக்க முழுக்க  பொருத்தமாக அமைந்துள்ளது என்றால் அது மிகையல்ல.




தமிழ் சினிமாவில் ஏ ஆர் முருகதாஸ் இதுவரை இயக்கியுள்ள மொத்த திரைப்படங்கள் எட்டுதான். ஆனாலும் அதிகபட்சமாக விஜயை வைத்து மூன்று படங்களை இயக்கி உள்ளார். இந்த மூன்று படங்களுமே பிரபலமாக பேசப்பட்டது. இது மட்டுமல்லாமல் ஒரு இயக்குனராக கால் பதித்த ஏ.ஆர் முருகதாஸ் ஒரு தயாரிப்பாளராகவும் பணிபுரிந்து எங்கேயும் எப்போதும், ராஜா ராணி, ராங்கி, வத்திக்குச்சி, மான் கராத்தே, உள்ளிட்ட பல  வெற்றி படங்களையும் தயாரித்து இருக்கிறார்.


இன்று முருகதாஸுக்குப் பிறந்த நாள்.. வாழ்த்துவோம்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்