"வந்தாச்சு வந்தாச்சு லீவு"... தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு ஏப்ரல் 28ம் தேதி கடைசி வேலை நாள்!

Su.tha Arivalagan
Apr 07, 2023,11:34 AM IST
சென்னை:  தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு ஏப்ரல் 28ம் தேதி கடைசி வேலை நாள் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கோடைகாலம் நெருங்கி விட்டது. கோடைகாலம் வந்தாலே, பள்ளிகளில் ஆண்டுத் தேர்வுகள் களை கட்டியிருக்கும். பிளஸ்டூ தேர்வுகள் முடிந்து தற்போது பத்தாம் வகுப்புத் தேர்வுகள் நடந்து வருகின்றன. பிற வகுப்புகளுக்கான தேர்வுகளும் பல பள்ளிகளில் தொடங்கி விட்டன. இருப்பினும் அரசுத் தரப்பில் அதிகாரப்பூர்வமாக இதுதொடர்பாக எந்த தகவலும் வெளியாகாமல் இருந்து வந்தது.

தற்போது பள்ளிகளுக்கான கடைசி வேலை நாள் மற்றும் 6 முதல் 9ம் வகுப்பு வரையிலான தேர்வுகள் குறித்த அறிவிப்பை மாநில பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.



இதுதொடர்பாக அனைத்து மாவட்ட பள்ளிக் கல்வி அலுவலர்களுக்கு சர்க்குலர் அனுப்பபப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

1 ம் வகுப்பு முதல் 3ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 21ம் தேதிக்குள் ஆண்டுத் தேர்வை முடித்து விட வேண்டும். 4 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 28ம் தேதிக்குள் தேர்வை முடிக்க வேண்டும்.

அனைத்து வகுப்புகளுக்கும் ஏப்ரல் 28ம்தேதிதான் கடைசி வேலை நாளாக இருக்க வேண்டும் என்றும் மாநில பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து ஏப்ரல் 28ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்படும். ஜூன் மாதம் முதல் வாரத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று தெரிகிறது.

தற்போது தமிழ்நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் கோடை விடுமுறை வழக்கம் போல இருக்குமா அல்லது நீட்டிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பில் இப்போதே மாணவர்கள் உள்ளனர்.