என்னோட 30 வருட அனுபவத்தில்.. அந்தகனை மறக்கவே முடியாது.. உணர்ச்சிவசப்பட்ட சிம்ரன்!

Manjula Devi
Aug 17, 2024,01:39 PM IST

சென்னை:   தமிழ் திரையுலகில் 29 வருடத்தை கடந்து விட்டேன். 30 ஆவது வருடத்தில் அந்தகன் படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது என அந்தகன்  பட வெற்றி விழாவில் நடிகை சிம்ரன் உணர்வு பூர்வமாக நன்றி தெரிவித்து பேசியுள்ளார்.


டாப் ஸ்டார் பிரசாந்த் நடிப்பில் தியாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த அந்தகன் திரைப்படத்தின் வெற்றி விழா சென்னையில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் நடைபெற்றது. அப்போது இதில் நடிகர் பிரசாந்த், சிம்ரன், பிரியா ஆனந்த், வனிதா விஜயகுமார், சமுத்திரக்கனி, இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், மற்றும் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.


இப்படம் குறித்து நடிகை சிம்ரன் பேசியது:




திரையுலகப் பயணத்தில் 29 வருடங்களை நிறைவு செய்து விட்டேன். இந்த முப்பதாவது ஆண்டில் 'அந்தகன்' சூப்பர் ஹிட் படமாக அமைந்திருக்கிறது. இதற்காக நான் இயக்குநர் தியாகராஜனுக்கு தான் நன்றி சொல்வேன். அவர்தான் இந்த படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை அளித்தார்.  


படப்பிடிப்பு தளத்தில் தியாகராஜன் அமைதியாக இருப்பார். படப்பிடிப்பு தளமும் அமைதியாக இருக்கும். பணிகள் மட்டும் சுறுசுறுப்பாக நடைபெறும்.  பிரசாந்த் - என்னுடைய ராசியான ஜோடி. இதற்காக அவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 


ப்ரியா ஆனந்த் - படத்தில் அழகாகவும், ரியலிஸ்டிக்காகவும் நடித்திருந்தார். பான் இந்திய நட்சத்திரமாக அவர் உயர வேண்டும் என வாழ்த்துகிறேன் என கூறியுள்ளார். 


நடிகை ப்ரியா ஆனந்த்:




இந்தப் படம் எனக்கு மிகவும் ஸ்பெஷல். இந்தப் படத்தின் பணிகள் தொடங்கும் போது மிகவும் பாசிட்டிவாக இருந்தது. படம் வெளியான பிறகும் ரசிகர்களிடமிருந்தும் விமர்சகர்களிடமிருந்தும் பாசிட்டிவான விஷயங்கள் வந்து கொண்டே இருக்கிறது. அனைத்தும் ஒருமித்த விஷயமாக இருப்பதால் எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. 


90ஸ் ஸ்டார் பிரசாந்த்- சிம்ரன் என்று சொல்லலாம். இப்போதும் அவர்கள் அப்படியே தான் இருக்கிறார்கள்.  இவர்கள் தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும் என விரும்புகிறேன். 


படப்பிடிப்பு தளத்தில் இயல்பாகவும், அமைதியாகவும் இருப்பவர் இயக்குநர் தியாகராஜன். அவர் தொடர்ந்து படங்களை இயக்க வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன். அதிலும் குறிப்பாக இன்றைய இளம் தலைமுறைக்கு ஏற்ற வகையில் காதல் கதைகளை அவர் இயக்க வேண்டும். 


அந்தகன் போன்ற மிகப்பெரிய வெற்றி படத்தில் ஒரு பகுதியாக இருந்ததற்கு பெருமிதம் அடைகிறேன். இந்தப் படத்தை வெற்றி பெற செய்த பிரசாந்தின் ரசிகர்களுக்கும், மக்களுக்கும் நன்றி என கூறியுள்ளார். 


நடிகை வனிதா விஜயகுமார்: 




அந்தகன் படம் வெற்றி பெறுவதற்கு மனதார வாழ்த்திய ஊடகங்களுக்கும், திரையரங்கத்திற்கு வருகை தந்து வெற்றி பெற செய்த ரசிகர்களுக்கும் முதலில் நன்றியை தெரிவிக்க விரும்புகிறேன். '90ஸ் கிட்ஸ்' என்ற வார்த்தையை கேட்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.  இதற்காக பிரசாந்த்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 90ஸ் ஸ்டார்ஸ் கம் பேக்  இதற்காக சிம்ரனுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.  


இந்தப் படத்திற்காக இணையதளத்தில் வெளியிடப்பட்ட பொதுமக்களின் கருத்தில் ஒரு முக்கியமான விஷயம் இடம்  பிடித்திருந்ததை கவனித்தேன். படம் பார்க்கும்போது தியேட்டரில் யாரும் செல்போனை பார்க்கவில்லை.‌ நானும் இந்த திரைப்படத்தை மூன்று முறை ரசிகர்களின் வரவேற்பினை காண்பதற்காக திரையரங்கத்திற்கு சென்றேன். அந்த தருணத்திலும் யாரும் செல்போனை பார்க்கவில்லை. அனைவரும் படத்தினை சீரியசாக பார்த்தனர். 


90களில் ஒரு திரைப்படத்தை திரையரங்கத்திற்கு சென்று பார்க்கும் போது எம் மாதிரியான வரவேற்பு கிடைத்ததோ..அது போன்றதொரு வரவேற்பு அந்தகன் படத்திற்கு கிடைத்தது. இதற்காக அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்