நிறைய படங்களில் நடிக்கனும்..ரசிகர்களின் அன்பை சம்பாதிக்கனும்.. அந்தகன் சக்சஸ் மீட்டில் பிரசாந்த்!

Manjula Devi
Aug 17, 2024,11:49 AM IST

சென்னை:   டாப் ஸ்டார் பிரசாந்த் நடிப்பில்  வெளியான அந்தகன் திரைப்படம் வெற்றி பெற்றுள்ள நிலையில், இப்படத்தின் வெற்றி தொடக்கம் தான். நிறைய படங்களில் நடிக்க வேண்டும் ரசிகர்களின் அன்பை சம்பாதிக்க வேண்டும் என சக்சஸ் மீட்டில்  நடிகர் பிரசாந்த் உற்சாகமாக பேசியுள்ளார்.


டாப் ஸ்டார் பிரசாந்த் நடிப்பில் நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிகரும் இயக்குனருமான  தியாகராஜன் அந்தகன் படத்தை இயக்கி இருந்தார். ஸ்டார் மூவிஸ் சார்பில் சாந்தி தியாகராஜன் தயாரித்திருந்த இப்படத்தில் பிரசாந்த், சிம்ரன், சமுத்திரக்கனி, கே எஸ் ரவிக்குமார், பிரியா ஆனந்த், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கண் தெரியாத பியோனா கலைஞராக நடிப்பில் அசத்தியிருந்த பிரசாந்த் நடிப்பில் உருவான இப்படம் கடந்த ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.


இப்படத்தின் வெற்றி விழா சென்னையில் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. விழாவில் இயக்குனர் தியாகராஜன், இயக்குனரும், நடிகருமான கே.எஸ்  ரவிக்குமார், டாப் ஸ்டார் பிரசாந்த், நடிகைகள் சிம்ரன், வனிதா விஜயகுமார், ப்ரியா ஆனந்த், செம்மலர் அன்னம், நடிகர் பெசன்ட் ரவி, செந்தில் ராகவன், சண்டை பயிற்சி இயக்குனர் ராம்குமார், இயக்குனர் பிரவீண் காந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.


விழாவில் பிரசாந்த் பேசியதாவது:




படம் வெளியான தருணத்திலிருந்து இப்படத்தைப் பற்றிய விமர்சனம் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியது.‌  இந்தப் படத்தின் வெற்றிக்கு படத்தில் நடித்த கார்த்திக் போன்ற  அனுபவமிக்க நட்சத்திரங்களும் மிக முக்கியமான காரணம். படப்பிடிப்பு தளத்தில் அவருடைய உற்சாகம் ஒட்டுமொத்த குழுவினருக்கும் உத்வேகத்தை அளித்தது.‌


சமுத்திரக்கனி, கே. எஸ். ரவிக்குமார், ஊர்வசி, யோகி பாபு போன்ற நட்சத்திர நடிகர்களுடன் இணைந்து நடித்த அனுபவமும் மறக்க முடியாதது. நான் ஏராளமான வெற்றி படங்களில் நடித்திருந்தாலும் இந்தப் படத்தில் நடிக்கும் போது எனக்கு கிடைத்த அனுபவம் வித்தியாசமானதாக இருந்தது. குறிப்பாக நான் இன்றும் மதிக்கும் இயக்குநரான கே. எஸ். ரவிக்குமார் , ஊர்வசி, யோகி பாபு இவர்களுடன் படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றிய போது ஒவ்வொரு நாளும் படமாக்கப்படும் காட்சியை முழுதாக புரிந்து கொண்டு அந்த காட்சியை எப்படி மேம்படுத்தலாம் என திட்டமிட்டு, அதற்கு ஒத்திகை பார்த்து நடித்தோம். 


60களில் நடிகர்கள் எப்படி நடித்தார்கள், 70களில் நடிகர்கள் எப்படி நடித்தார்கள், 80களில் நடிகர்கள் எப்படி நடித்தார்கள் என்பதனை உடன் பணியாற்றிய கலைஞர்களுடன் பேசி விசயங்களை கேட்டு நடித்தோம். குறிப்பாக நாகேஷ், பானுமதி அம்மா, நம்பியார் போன்றவர்களின் நடிப்பு எப்படி இருந்தது என்பதனை அவர்களுடன் அருகில் இருந்து பணியாற்றிய உதவியாளர்களிடமிருந்து கேட்டு தெரிந்து கொண்டேன். இதுபோன்ற அனுபவம் எனக்கு மீண்டும் 'அந்தகன்' படத்தில் கிடைத்தது. இதனால் நான் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். 


தற்போது நம்மிடம் இல்லாத, இந்த படத்தில் நடித்த நடிகர் மனோபாலா உடன் நடித்த அனுபவமும் மறக்க முடியாது.‌ அவர் என்னுடைய தந்தையார் இயக்கிய அனைத்து படத்திலும் நடித்திருந்தார்.‌ என்னுடனும் பல படங்களில் நடித்திருந்தார். இந்த படத்தின் வெற்றிக்கு அவருடைய ஆசியும் ஒரு காரணம். 


நானும், சிம்ரனும் நடித்த படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றிருக்கின்றன. அந்த வரிசையில் அந்தகனும் இடம் பிடித்திருக்கிறது. இதற்காக சிம்ரனுக்கு பிரத்யேகமாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.  படப்பிடிப்பு தளத்திலும், படப்பிடிப்பை நிறைவு செய்த பிறகும் என் வளர்ச்சியின் மீது அக்கறை காட்டி வரும் நடிகை பிரியா ஆனந்திற்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 


ரசிகர்களுக்கு பிடித்த அனைத்து நட்சத்திரங்களும் இணைந்து நடித்தது தான் இப்படத்தின் வெற்றிக்கு காரணம் என்றும் சொல்லலாம். அடுத்ததாக இயக்குநர். என் தந்தையாக இருந்தாலும் அவர் படப்பிடிப்பு தளத்தில் கதைக்கு என்ன தேவையோ அதற்கு முக்கியத்துவம் கொடுத்தார். அவருக்கு பக்கபலமாக திறமை வாய்ந்த தொழில்நுட்ப கலைஞர்களும் பணியாற்றினர்.


படத்தை நிறைவு செய்த பிறகு விளம்பரப்படுத்துவதற்காக ப்ரோமோ பாடல் ஒன்றையும் தயார் செய்தோம். இதற்காக ஒத்துழைப்பு அளித்த 'ராக் ஸ்டார்' அனிருத், 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி, பிரபுதேவா, சாண்டி மாஸ்டர் என அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.‌


இந்தப் படத்தின் வெற்றி என் திரையுலக பயணத்தில் ஒரு தொடக்கம் தான். தொடர்ந்து பல படங்களில் நடிக்க வேண்டும். ரசிகர்களின் அன்பை தொடர்ந்து சம்பாதிக்க வேண்டும்.‌ என் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், சக நட்சத்திர நடிகர்கள், நடிகைகள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 


இந்த மகிழ்ச்சியான தருணத்தில் தேசிய விருதினை வென்றிருக்கும் இயக்குநர் மணிரத்னம், இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் மற்றும் தேசிய விருதை வென்ற அனைத்து கலைஞர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார் பிரசாந்த்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்