அந்தகன் வெற்றி அசாதாரணமானது.. ஓடிடி, பைரசி எல்லாத்தையும் மீறி ஜெயிச்சிருக்கு.. கே.எஸ். ரவிக்குமார்
சென்னை: தற்போது திரைப்படங்களை உருவாக்குவது எளிது. அதை வெளியிடுவது கடினம். அதன் பிறகு அந்த திரைப்படம் வெற்றி பெறுவது அதைவிட கடினம். நல்ல படத்திற்கு கூட மக்கள் திரையரங்கத்திற்கு வருகை தருவதில்லை. பைரசியிலோ, ஓ டி டி யிலோ வந்து விடும். அதில் பார்க்கலாம் என்கிறார்கள். இதையெல்லாம் மீறி அந்தகன் படம் வெற்றி பெற்று இருக்கிறது என்றால் அதுதான் நிஜமான வெற்றி என்று இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் கூறியுள்ளார்.
அந்தகன் படம் கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளிவந்து வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று நிலையில் இப்படத்தின் வெற்றி விழா கொண்டாட்டத்தில் நடிகர் பிரசாந்த், நடிகைகள் சிம்ரன், வனிதா விஜயகுமார், பிரியா ஆனந்த், செம்மலர் அன்னம், நடிகர் பெசன்ட் ரவி, கலை இயக்குநர் செந்தில் ராகவன், சண்டை பயிற்சி இயக்குநர் ராம்குமார், இயக்குநர் பிரவீண் காந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இப்படம் குறித்து இயக்குநர் கே. எஸ். ரவிக்குமார் பேசுகையில் கூறியதாவது:
தற்போது திரைப்படங்களை உருவாக்குவது எளிது. அதை வெளியிடுவது கடினம். அதன் பிறகு அந்த திரைப்படம் வெற்றி பெறுவது அதைவிட கடினம். நல்ல படத்திற்கு கூட மக்கள் திரையரங்கத்திற்கு வருகை தருவதில்லை. பைரசியிலோ, ஓ டி டி யிலோ வந்து விடும். அதில் பார்க்கலாம் என்கிறார்கள். நட்சத்திர நடிகர்கள் நடித்திருக்கிறார்கள் என்றால் மட்டுமே அவர்களுடைய ரசிகர்கள் திரையரங்கத்திற்கு சென்று பார்க்கிறார்கள். இதையெல்லாம் மீறி அந்தகன் படம் வெற்றி பெற்று இருக்கிறது என்றால் அதுதான் நிஜமான வெற்றி. படத்தைப் பற்றி வெளியான விமர்சனங்கள் அனைத்தும் சிறப்பானதாக இருந்தன.
இந்தப்படம் திரையிட்ட திரையரங்குகளில் இரவு காட்சிகளில் கூட ரசிகர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்பதை கேள்விப்பட்டு மகிழ்ச்சி அடைந்தேன். அதனால் இந்த படக் குழுவினர் வெற்றி விழா கொண்டாடுவதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஏனெனில் அந்தகன் படம் ஒரு உண்மையான வெற்றியை பெற்றிருக்கிறது. படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் தியாகராஜனின் சிரிப்பில் பல அர்த்தங்கள் இருக்கும். ஆனால் அவருடைய கவனம் எல்லாம் இயக்கத்தில் தான் இருக்கும். நடிகர்கள் சிறப்பாக நடித்தால் உடனடியாக பாராட்டை தெரிவித்து விடுவார்.
படத்தில் பிரசாந்தின் நடிப்பு மிகச் சிறப்பாக இருந்தது. கண் பார்வை தெரியும். ஆனால் கண் பார்வை தெரியாதது போல் நடிக்க வேண்டும். பிறகு கண்பார்வை நிஜமாகவே தெரியாது. அது போல் நடிக்க வேண்டும். இந்த வேடத்தில் சரியான அளவுகோலில் நடிக்க வேண்டும். கொஞ்சம் மீறினாலும் மிகை நடிப்பு வெளிப்பட்டு விடும். இந்த வேடத்தில் சிறப்பாக நடித்த பிரசாந்துக்கு என்னுடைய வாழ்த்துக்கள். மேலும் பல திரைப்படங்களில் நடித்து வெற்றி பெற வேண்டும். திரையுலகில் மீண்டும் வலம் வர வேண்டும் என இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
சிம்ரனை 'தர்மசக்கரம்' எனும் படத்தில் நடிக்க வைப்பதற்காக மும்பை சென்று அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினேன். ஆனால் அர்ஜுன் நடித்த 'கொண்டாட்டம்' படத்தில் தான் அவருடன் இணைந்து பணியாற்றினேன். ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் படமாக்கப்பட்ட முதல் தமிழ் படம் 'கொண்டாட்டம்' தான். அந்தத் தருணத்தில் சிம்ரனுக்கு தமிழ் சுத்தமாக தெரியாது. நான் உடல் மொழியுடன் பிராம்ப்ட்டிங் செய்வதை பார்த்துக் கொண்டு நடித்து அசத்தினார். அவர் திரையுலகத்திற்கு வருகை தந்து 29 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறதாம். இன்னும் 30 ஆண்டுகள் திரை உலகில் நடிக்க வேண்டும் என்று தன் ஆசையை தெரிவித்துள்ளார்.
ஒரு எல்லைக்கு பிறகு ஒரு கலைஞருக்கு நடிப்பு நன்றாக வரும் என்றால் சினிமா அவர்களை விடாது. நீங்கள் சினிமாவை விட்டு விலக நினைத்தாலும் சினிமா உங்களை விடாது. நாகேஷ் இறுதி காலகட்டம் வரை நடித்துக் கொண்டே இருந்தார். அவர் நடித்த கடைசி படம் 'தசாவதாரம்'. அப்போது கூட அவருக்கு கண் பார்வையில் சிறிய தடுமாற்றம் இருந்ததால் தான் நடிப்பதை குறைத்துக் கொண்டார். நானும் அந்த வகையான நடிகன் தான் என நினைக்கிறேன்.
இயக்குநர் தியாகராஜனுக்கு நன்றிகள் எவ்வளவு சொன்னாலும் போதாது. இந்தப் படம் சற்று தாமதம் ஆனாலும் சரியான நேரத்தில் வெளியாகி வெற்றியை பெற்றிருக்கிறது. இதற்காக படத்தில் நடித்த அனைத்து நட்சத்திர நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார்.
இயக்குநர் தியாகராஜன்:
இந்தப் படத்தில் சிறிய வேடத்திற்கு கூட திறமையான கலைஞர்களை தேர்வு செய்து நடிக்க வைத்தோம். திரையரங்குகளில் மறைந்த நடிகர் மனோபாலாவின் வசனங்களுக்கும், வனிதா விஜயகுமார் பேசும் வசனங்களுக்கும் கைத்தட்டல் கிடைக்கிறது என்றால் அதற்கு அவர்களுடைய கடுமையான உழைப்பும் ஒரு காரணம்.
பிரியா ஆனந்த் நடிப்பு ரியலிஸ்டிக்காக இருந்தது. அவருடைய அழகு - சிரிப்பு- டயலாக் டெலிவரி- என எல்லாம் சிறப்பாக இருந்தது. இந்தத் திரைப்படத்தில் பிரசாந்த் நாயகனாக இருந்தாலும் அனைத்து கேரக்டருக்கும் சமமான வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.
முதலில் இந்த திரைப்படத்தை ஜெயம் ராஜா இயக்குவதாக இருந்தது. அவருடன் மூன்று மாதம் இணைந்து பயணித்தோம். இந்த மூன்று மாத காலத்திற்குள் அவர் லண்டனில் உள்ள வெளிநாட்டு நடிகை ஒருவர் இந்த கதாபாத்திரத்தில் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று சொன்னார். அவருடனும் பேச்சு வார்த்தை நடத்தினோம். அவர் கேட்ட சம்பளத்தையும் கொடுப்பதற்கு ஒப்புக்கொண்டோம். மூன்று மாதத்திற்கு பிறகு ஜெயம் ராஜாவிற்கு சிரஞ்சீவி நடிக்கும் படம் ஒன்றை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அந்தப் படத்தை இயக்கி நிறைவு செய்த பிறகு இந்த படத்தில் பணியாற்றுகிறேன் என ஜெயம் ராஜா சொன்னார். நான் நன்றி என்று சொல்லிவிட்டு, உங்களுடைய பயணத்தை வெற்றிகரமாக தொடருங்கள் என்றேன்.
அதன் பிறகு நான் இயக்க தீர்மானித்தேன். அந்த கதாபாத்திரத்திற்கு யாரை நடிக்க வைப்பது என்பது குறித்து யோசிக்க தொடங்கினோம். அப்போது சிம்ரனை தவிர வேறு யாரும் என் எண்ணத்தில் வரவில்லை. அவரும் நடிக்க ஒப்புக்கொண்டு பெரிய அளவில் பேராதரவை வழங்கினார். அவர் மேடையில் தமிழில் பேசியதை மிகவும் ரசித்தேன்.
இயக்குநர் கே எஸ் ரவிக்குமார்- அவர் ஏற்கனவே பிரசாந்த் நடித்த 'தமிழ்' என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அவரிடம் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று சொன்னவுடன் உடனடியாக ஒப்புக்கொண்டார். படப்பிடிப்பு தளத்தில் அவருடைய ஈடுபாடு, ஒத்துழைப்பு பாராட்டும்படி இருந்தது.
சமுத்திரக்கனி- தெலுங்கில் பரபரப்பாக நடித்துக் கொண்டு இருக்கும் முன்னணி நடிகர். நான் கேட்டுக் கொண்டதன் பேரில் இந்த படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தார் அவரை ஒரு காட்சியில் அரைகுறை உடையுடன் பாத்ரூமில் உட்கார சொன்னேன். எந்த தயக்கமும் இல்லாமல் அந்த காட்சியில் சிறப்பாக நடித்துக் கொடுத்தார்.
பிரசாந்த்- இந்தப் படத்தில் மட்டுமல்ல எந்த படத்திலும் இயக்குநர் என்ன சொல்கிறாரோ அதைத்தான் கேட்பார். அவர் சொன்னதைத்தான் செய்வார். இவராக எந்த கருத்தையும் பகிர்ந்து கொள்ள மாட்டார். அதேபோல் இந்தப் படத்தில் நான் என்ன சொன்னேனோ அதை மட்டுமே அவர் செய்தார்.
அவர் பியானோ வாசிப்பதாகட்டும், கண் தெரியாமல் நடிப்பதாகட்டும் என எல்லா காட்சியிலும். நேச்சுரலாக நடித்தார். இந்த திரைப்படத்தில் சண்டைக் காட்சி இல்லை, பாடல் காட்சி இல்லை, ஆனால் அந்த குறையை தன்னுடைய நேர்த்தியான நடிப்பால் மறக்கடிக்க செய்திருந்தார். அவருடைய நடிப்பாற்றலால் இந்த படத்தை வெற்றி பெற செய்திருக்கிறார்.
படத்தில் நடித்த அனைத்து நட்சத்திர நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இந்த திரைப்படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர்களுக்கும், திரையிட்ட திரையரங்க அதிபர்களுக்கும், வெற்றி பெற செய்த ரசிகர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.
இயக்குநர் பிரவீன்காந்த்:
அந்தகன் படத்தின் வெற்றிக்கு அப்படத்தின் 'கரிஸ்மா' தான் காரணம். தியாகராஜன் சார் தன்னுடைய மகனுக்காக இந்த படத்தை உருவாக்கியிருக்கிறார். தன் நடிப்பை நிறுத்திக் கொண்டு பிரசாந்தின் வளர்ச்சிக்காக அரும் பாடுபட்டு வருகிறார். அவருடைய நடிப்புத் திறனுக்கு இன்றைக்கு அவர் ஒரு பான் இந்தியா ஸ்டார். தன் மகனை மீண்டும் டாப் ஸ்டார் ஆக்குவதற்காக கடினமாக உழைத்து உருவாக்கிய படம் தான் 'அந்தகன்'. இன்றைய இளம் தலைமுறை ரசிகர்கள் எதை விரும்புவார்களோ அதை வழங்கி வெற்றியை ருசித்திருக்கிறார்.
இந்தப் படத்தில் நடித்த பிரசாந்த், இடைவெளியை உணர வைக்காமல் நன்றாக நடித்திருக்கிறார். 'ஜோடி', 'கண்ணெதிரே தோன்றினாள்', 'ஜீன்ஸ்' போன்ற படங்களில் திரையில் தோன்றிய பத்தாவது நிமிடத்திலே நம் மனதில் பதிந்த பிரசாந்தை இந்த படத்தில் காண முடிகிறது. இதற்கு அவருடைய கடின உழைப்புதான் காரணம். இன்றளவிலும் தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார். தமிழ் சினிமாவில் எம்ஜிஆருக்கு பிறகு எந்த கெட்ட பழக்கமும் இல்லாத ஒரே நடிகர் பிரசாந்த் தான் என சொல்லலாம்.
தியாகராஜன்- பிரசாந்த் ஆகியோரைப் போல் திரையுலகில் அனைவரும் இருக்க வேண்டும் என விரும்புகிறேன். பிரசாந்த்திற்கு மீண்டும் ஒரு வெற்றியை கொடுத்த தியாகராஜனுக்கு வாழ்த்துகள் என கூறியுள்ளார்.
நடிகர் பெசன்ட் ரவி:
மகிழ்ச்சியாக இருக்கிறது. பிரசாந்துடன் நிறைய படங்களில் நடித்திருந்தாலும் அந்தகன் எனக்கு ஸ்பெஷல். படத்தினை விளம்பரப்படுத்துவதற்காக அவருடன் தமிழக முழுவதும் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டேன்.
தியாகராஜன் மீது எனக்கு அளவு கடந்த நம்பிக்கை இருக்கிறது. இருந்தாலும் படத்தைப் பற்றிய சிறிய சந்தேகம் எனக்குள் இருந்து கொண்டே இருந்தது. இந்த படத்திற்காக பிரசாந்த் உடன் சுற்றுப் பயணத்தில் இருக்கும் வரை இந்த படத்தை நான் பார்க்கவில்லை. பிரசாந்த் - தியாகராஜன் ஆகியோர் மீது இருந்த நம்பிக்கையின் காரணமாக அவர்களுடன் பயணித்தேன்.
அதன் பிறகு ஒரு நாள் தியாகராஜன் என்னை அழைத்து படத்தை காண்பித்தார். அதிர்ச்சியில் உறைந்தே போனேன். படம் மிக அழகாக இருந்தது. நேர்த்தியாக இருந்தது. படம் வெற்றி பெறும் என்பதை அப்போது உறுதி செய்தேன். இருந்தாலும் இந்த படத்தின் வெற்றி மீது எனக்கு சின்ன சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. இருந்தாலும் படம் வெளியான முதல் நாள் முதல் காட்சி ரசிகர்களுடன் நான், பிரசாந்த், சிம்ரன் ஆகியோர் படத்தை பார்த்துக் கொண்டிருந்தோம்.
பொதுவாக ஒரு படம் பிடிக்கவில்லை என்றால் தூக்கம் வந்துவிடும். ஆனால் இந்த படம் கண்ணை மூடி கண்ணை திறப்பதற்குள் முடிவடைந்து விட்டது. அதனால் இந்தப் படம் சிறப்பாக இருக்கிறது என்று மனித உளவியலே சொல்லிவிட்டது. ஏனெனில் ஏற்கனவே பார்த்த திரைப்படத்தை மீண்டும் திரையில் பார்க்கும்போது ஏதேனும் ஒரு வகையில் இடையூறு ஏற்படும். ஆனால் அந்தகன் படத்தை திரையரங்கத்தில் பார்க்கும்போது யாருக்கும் எந்த இடையூறையும் ஏற்படுத்தவில்லை. அனைவரும் படத்தை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த வகையில் இது போன்ற வெற்றி படத்தை வழங்கிய தியாகராஜனுக்கு நன்றி நன்றி என கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்