திருப்பதி மலைப்பாதையில்.. மீண்டும் சிறுத்தை .. பக்தர்களே.. உஷார்!
திருப்பதி: திருப்பதி மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கண்காணிப்பு கேமராவில் தெரியவந்துள்ளது.
உலகப் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்று திருப்பதி ஏழுமலையான் கோவில். இங்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக வந்து செல்கின்றனர். அதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வருகின்றனர்.
கடந்த ஜூன் மாதம் ஆந்திரா மாநிலம் நெல்லுரை சேர்ந்த லக்ஷிதா என்ற சிறுமி தனது பெற்றோருடன் திருப்பதி மலை பாதையில் பாதயாத்திரை சென்றிருந்தார். அப்போது சிறுமியை சிறுத்தை கொடூரமாக கடித்துக் குதறியது. லக்ஷிதாவை கடித்து குதறியது சிறுத்தை தான் என கண்டறியப்பட்ட பின்னர் திருப்பதி மலைப் பாதையில், சிறுத்தையை பிடிப்பதற்காக லக்ஷ்மி நரசிம்மர் சன்னதி அருகில் கூண்டு அமைக்கப்பட்டது. இந்த கூட்டில் சிறுத்தை சிக்கியது . இதனால் மக்கள் பீதி அடைந்தனர்.
ஆனால் அடுத்தடுத்து மேலும் சில சிறுத்தைகளும் சிக்கியதால் பக்தர்கள் பீதியடைந்தனர். இதையடுத்து
மலைப்பாதையில் மக்கள் பாதுகாப்பாக செல்வதற்கு ஏதுவாக கைத்தடி வழங்கும் திட்டத்தை தேவஸ்தானம் அறிமுகப்படுத்தியது. மேலும் மக்கள் தனித்து செல்லக்கூடாது எனவும், கூட்டமாக செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தியது.
காலை 6:00 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பாதயாத்திரையாக திருப்பதி மலை பாதையில் செல்ல வேண்டும் என ஏகப்பட்ட கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. தொடர்ந்து லட்சுமி நரசிம்மர் கோவில் அருகே கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கண்காணிப்பு கேமராவில் தெரியவந்துள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
இதனால் பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் மத்தியில் பீதி நிலவி வருகிறது. மீண்டும் திருமலை மலைப்பாதையில் பாதரையாத்திரை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் கட்டுப்பாட்டு விதிக்கப்பட்டு வருகிறது.