இனி தமிழில் மட்டுமே அரசாணை வெளியீடு.. தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

Manjula Devi
Apr 16, 2025,06:48 PM IST

சென்னை: தமிழக அரசு சார்பில் வெளியிடப்படும் அரசாணைகள் மற்றும் சுற்றறிக்கைகள் இனி தமிழில் மட்டுமே இருக்க வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 


ஒன்றிய அரசு அறிவித்த மும்மொழிக் கொள்கை எனப்படும் இந்தி திணிப்புக்கு பல்வேறு கட்சிகளும் தங்களின் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக தமிழ்நாடு அரசு 3,500 ஆண்டுகள் பழைமை மிக்க பண்பாடு, நாகரிகத்தின் மூத்த மொழியாக உள்ள தமிழ் மொழி,  தாய் மொழியாகவும், இரண்டாவது ஆங்கில மொழியாகவும் இருக்கும் நிலையே தொடர வேண்டும் என தமிழ்நாடும், தமிழக மக்களும் விரும்புகின்றனர்.


இதில் விருப்பப்பட்டு வேறு மொழியை அவர்கள் கற்றுக் கொள்ளலாம். ஆனால், ஒரு மொழியைக் கட்டாயப்படுத்தி, திணிப்பதை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.இதனால் இருமொழிக் கொள்கையே பின்பற்றப்படும் என தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. 




அதே சமயத்தில் மும்மொழி கொள்கைக்கு எதிராக பல்வேறு முன்னெடுப்புகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி  பொதுமக்கள் ஒன்று கூடும் முக்கிய இடங்கள் மற்றும் அரசு அலுவலங்களில் பெயர் பலகைகள் தமிழில் தான் இருக்க வேண்டும். இரண்டாவது மொழியாக ஆங்கிலம் இருக்க வேண்டும் எனக் அறிவுறுத்தப்பட்டு வந்தது. இதனால் பல்வேறு இடங்களில் உள்ள ஹிந்தி வார்த்தைகள் அழிக்கப்பட்டு வந்தது.


அந்த வகையில் தற்போது மீண்டும் ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது தமிழக அரசு. பொதுவாக அனைத்து துறை சார்ந்த அரசு அலுவலகங்களுக்கு அனுப்பப்படும் அறிவிப்புகள், கோப்புகள், கடிதங்கள், என அனைத்து அரசாணைகளும் ஆங்கிலத்தில் தான் இருக்கும்.ஒரு சில அறிவிப்புகள் மட்டுமே  தமிழில் வெளியிட்டு வருவது வழக்கம்.


ஆனால், இனி தமிழக அரசு சார்பில் வெளியிடப்படும் அரசாணைகள் மற்றும் சுற்றறிக்கைகள் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும் என தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 


மேலும், துறை தலைமை அலுவலகங்களில் இருந்து பிற அரசு அலுவலகங்களுக்கு அனுப்பப்படும் கருத்துரைகள்  தமிழில் மட்டுமே இடம்பெற வேண்டும். பொதுமக்களிடமிருந்து பெறப்படும் தமிழ் கடிதங்களுக்கு தமிழிலேயே பதில் அளிக்க வேண்டும்.

அரசு பணியாளர்கள் அனைத்து பதிவுகளிலும் தமிழில் மட்டுமே கையொப்பமிட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.